Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, February 17, 2011

என்னை கட்டிப்போட்ட கதை

நான் ஒரு புத்தக பைத்தியம். ஒரு ஆங்கில நாவலை எடுத்துக்கொண்டு, அதை படிக்க ஆரம்பித்ததில், பதிவிடகூட வளையவில்லை. (அதனால் பதிவுலகம் ஒண்ணும் பெருசா இழந்துடலைன்னு தெரியும். விடுங்க... விடுங்க...) அந்த புத்தகத்தோடு, ஒரு ஆங்கில படமும் பார்த்தேன். பதிவு போட உருப்படியா ஒரு விஷயமும் இல்லாததால இதை பதிவா போடறேன். இது மட்டும் உருப்படியான விஷயமான்னு பின்னூட்டம் போடுபவர்கள் கண்டிக்கப்படுவார்கள்.   :-)


பார்த்த படம்: காட் பாதர் (ஆங்கிலம்) (முதல் பாகம்)

ஒரு டானின் வாழ்க்கையை கூறும் கதை. டான் என்றாலும் ஒரு ethic உடன் வாழ்வது, சொந்த வாழ்வுடன் சம்பந்தப்பட்ட பழிவாங்கல்கள், துரோகங்கள், எல்லாம் கிடைத்தும் சமூக அந்தஸ்துக்காக ஏங்குவது, இன்னும் பல விஷயங்களை வேறு பரிணாமத்தில் கூறும் படம். டானின் மகனாக இருக்கும் மைக்கேல் தன டான் தந்தையின் தொழிலை வெறுப்பதில் ஆரம்பிக்கும் கதை, கடைசியில் தானும் ஒரு டானாக மாறுவதில் முடிவடைகிறது. நம்மூர் சிவாஜியுடன் ஒப்பிடப்படும் மெர்லோன் பிராண்டோவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. ஆனந்த விகடனில் வந்த 'உலக சினிமா' பகுதியில் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட படம். ஆக்க்ஷன் படம் அல்ல. கமலின் 'நாயகன்' படம் போன்றது. (காமெடி படம், செண்டிமெண்ட் படம், ஆக்க்ஷன் படம், ஆர்ட் படம், மசாலா  போல இந்த வகை படங்களை என்னவென்று குறிப்பிடுவது என்று தெரியவில்லை.)   subtitle வைத்துக்கொள்வது உசிதம். ஏன்னா, வசனம் பிற மொழிகளிலும் பேசப்படுகிறது. பொறுமையாக படம் பார்ப்பவர்கள் ரசிக்கலாம்.

படித்த புத்தகம்: பீட்டர் விடறேன்னு நினைக்காதீங்க. ஆங்கில எழுத்தாளர் 'ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்' ன் HIT AND RUN . நம்மூர் சுஜாதாவை இவருடன் தான் ஒப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் கதை படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு இவருடைய கதைகள் a very good starter. எழுத்தாளர் பாலகுமாரனால் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளர். எளிய ஆங்கில நடையில், விறுவிறுப்பு குறையாமல், பல திருப்பங்கள் உள்ளடக்கிய கதைகள் இவருடையது.

இந்த கதையில் பெரும்பணக்காரரான ரோஜருக்கு கூட்டாளியாகும் வாய்ப்பு ஸ்காட்டுக்கு கிடைக்கிறது. பேரழகியான ரோஜரின் மனைவியின் அழகால் சலனமடையும் ஸ்காட்டுக்கு அவளுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அதுவும் ரோஜருக்கு தெரியாமல் சொல்லிக்கொடுக்க வேண்டும். அவள் கார் ஓட்டி போய் ஒரு போலிசை கொன்றுவிடுகிறாள். அந்த விபத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க ஸ்காட் முயற்சிக்கிறான். ஆனால் போனில் ஒரு மர்மக்குரல் இது சம்பந்தமாக பணம் கேட்டு இருவரையும் மிரட்டுகிறது. ரோஜருக்கு தெரியாமல் இந்த சிக்கலை ஸ்காட் எப்படி தீர்க்கிறான் என்பது தான் கதை. உண்மையில் செம்ம்ம்ம்ம த்ரில்லிங். இதை சும்மா சில வரிகளில் சொல்லிவிட்டேன். ஆனால், படித்து பாருங்கள். நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.

Monday, February 7, 2011

இந்த பதிவுக்கு டைட்டில் தரத்தெரியவில்லை

            இணைய பதிவுகளை நான் படிப்பது மிகவும் குறைவு. காரணம் நான் படித்த பலரின் பதிவுகள் வெறும் நகைச்சுவை உணர்வுடனும், எந்த உபயோகமான தகவல்களையும் உள்ளடக்கியதாக இல்லாமலும், நான் நின்னேன், நடந்தேன், போனேன், வந்தேன் என்பதாகவும் தான் இருக்கின்றன.( 'இந்த விமர்சனம் என் பதிவுகளை முக்கியமாக குறிப்பிடட்டும், நான் ஒண்ணும் பெரிய இவ இல்ல' என்பதற்காக இந்த வார்த்தைகளை போட்டுள்ளேன். மற்றவர்களை குறிப்பிட விரும்பவில்லை.) எனவே தான் பெரும்பாலும் நான் மற்றவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட மாட்டேன். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஓட்டு மட்டும் போட்டு விட்டு வந்து விடுவேன்.

             எனக்கு இலக்கியம், இலக்கியவாதி, அந்த ist , இந்த ist  இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாது. நான் படிக்கும் ஒரு விஷயம் அரை நிமிடமாவது என்னை மௌனத்தில் ஆழ்த்த வேண்டும். கால் நிமிடமாவது மனதை அழுத்த வேண்டும். நான் வேலை எதுவும் இல்லாமல் யோசிக்கும்போது கொஞ்ச நேரமாவது 'அன்னைக்கு படிச்சோமே ஒரு விஷயம். அந்த எழுத்துகளின் மூலம் என்ன சொல்ல வந்திருக்கிறார்கள்' என்று யோசிக்க வைக்க வேண்டும். எனக்கு அது தான் இலக்கியம். எனவே அது போன்ற பதிவுகளை தேடிக்கொண்டே இருக்கிறேன்.

             இப்படி இருக்கையில், என் கணினியில் எதேச்சையாக 'ஓம் சிவோஹம்'  பாடலை (நான் கடவுள்)  கேட்ட நான், அதன் வரிகளை இணையத்தில் தேடியபோது http://thiral.blogspot.com என்னும் ஒரு தளம் சிக்கியது. அந்த பாடலுக்கு வரிகளையும், அந்த வரிகளின் அர்த்தங்களையும் தாங்கி நின்ற இந்த பதிவில் மனம் நின்றது. பாடலை winamp இல் ஓடவிட்டு, வரிகளை திருப்தியாக ரசித்த பின், அந்த தளத்தில் வேறென்ன பதிவுகள் இடப்பட்டிருந்தன என்பதை அசுவாரசியமாக பார்த்தேன். தலைப்புகள் மிகவும் வித்யாசமாக இருந்தன. இவர் இந்த மாதிரி தலைப்பில் என்னதான் எழுதி இருக்கிறார் என்று பார்க்கும் விருப்பத்தில் கையில் சிக்கிய பதிவை க்ளிக்கினேன். உண்மையிலேயே அருமையான நடை. வித்தியாசமான பதிவுகள். என் டேஸ்டுடன் ஒத்துப்போகிறவர்களுக்கு (மட்டும்) பிடிக்கும். ஆங்கிலத்திலும், தமிழிலும் மாறி மாறி பொளந்து கட்டுகிறார் மனிதர். கணக்குக்காக வாரம் ரெண்டு மூணு பதிவு போடாமல்,எழுதியே ஆகவேண்டும் என்று எழுதாமல், தனக்கு தோன்றும்போது மட்டும் பதிவிடுபவர் போலும். எந்த இணைப்புகளிலும் இணைத்துக்கொள்ளவில்லை. குறைந்த ஆனாலும் நல்ல பதிவுகள். எனக்கு இவர் பதிவுகள் முழு திருப்தி. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், மொக்கை பதிவு போடும் எனக்கே 60 followers. ஆனால் ஆழமான பதிவுகளை இட்ட இவரின் தளத்தின் followers வெறும் மூன்றே பேர். என்ன சொல்ல... சரி, நான் போய் நாலாவதா சேர்றேன். 

Friday, February 4, 2011

ரெய்கியா? அப்படினா?


அப்படினா ஒரு வெளிநாட்டு தியானம்.  இந்த பதிவு இந்த தியானம் சம்பந்தமான தியரி கிளாஸ் அல்ல. உலகம் முழுதும் நான்கு மில்லியன் மக்கள் கற்ற இந்த தியானம் சம்பந்தமான சில அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.நம்மூரில் இந்த தியானம் அவ்வளவாக விளம்பரப்படுத்தப்படவில்லை. எனவே ஒரு மிகச்சிறிய அறிமுகம், மிகச்சில அனுபவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த பதிவு.  இதில் குறிப்பிடுபவை பொய்யான, நம்பிக்கை வளர்க்கும் வார்த்தைகள் அல்ல. நிஜத்தில் நடந்தவையே. இந்த பதிவு யாரேனும் ஒருவருக்கேனும் பயனுள்ளதாக இருக்கட்டும் என்ற வேண்டுதலுடன் இந்த பதிவை இடுகிறேன். 

நான் கற்றதிலேயே இது ஒரு வித்யாசமான தியான முறை. நான் கற்றிருந்த எல்லா தியானங்களிலும் மன அமைதிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ஆனால், இந்த தியானத்தில் practical life க்கு தேவையான விஷயங்களையும் பெற்றுக்கொள்ள முடிவது உண்மையில் 'அதிசயம்'.  எனவே தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.   இதை தயவுசெய்து வேறெந்த தியான முறையுடனும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு தியான முறைக்கும் தனிதனி வழிமுறைகளும், சக்திகளும் உண்டு. மறுக்கவே முடியாது.  உங்களுக்கு வேறு ஏதேனும் தியான முறை பரிச்சயம் ஆகி இருந்தால், தயவுசெய்து அதிலிருந்து இதை வேறுபடுத்தி கொள்ளுங்கள். அதே போல இது எந்த மதத்திருக்கும் உரியதல்ல. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என அனைத்து மதக்காரர்களும் கற்று பயன் பெறுகிறார்கள்.

அறிமுகம்:
                   இந்த தியான முறை ஜப்பானில் இருந்து வந்தது. மிகாவ் உசுயி என்பவர் 21 நாட்கள் ஒரு மலைமீது கடும் தவம் செய்தபின் குவான் இன் எனும் தேவதை அவருக்கு இந்த தியான முறையை போதித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படை கான்செப்ட் நம் உடம்பில் உள்ள சக்கரங்கள் என்னும் கண்ணுக்கு தெரியாத சூட்சமமான விஷயம். Kirlian Photography  என்னும் முறையில் எடுக்கப்பட்ட இதுகுறித்த படங்களை காணலாம். இந்த தியானத்தின் மூலம்  நம் உடலில் உள்ள சக்கரங்கள் தூய்மைபடுத்தப்பட்டு, சக்தி ஊட்டப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு சக்கரத்துக்கும் தனிப்பட்ட ஒரு சப்தம், ஒரு நிறம், ஒரு வடிவம், ஒரு உறுதிமொழி உள்ளது. அவற்றை கொண்டு நம்மையும் ஆன்ம ரீதியாக சரி செய்துகொண்டு, நம் விருப்பங்களையும் அடைய முடிகிறது.  மேலும் சில சின்னங்களும்  இதற்கு துணை புரிகின்றன.

ரெய்கி செய்பவர்கள் ஐந்து கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். அவை:
இன்று மட்டும்: கோபப்படாதீர்
இன்று மட்டும்: கவலைப்படாதீர்
இன்று மட்டும்: நன்றியுடன் இருங்கள்
இன்று மட்டும்: ஒருமைப்பாடுடன் பணி புரிந்திடுங்கள்
இன்று மட்டும்: மற்றவர்களிடமும் தன்னிடத்திலும் அன்பாக இருங்கள்
இந்த ஐந்தும் ரெய்கி செய்பவர்கள் மட்டுமலாது அனைவருமானது என்பது உங்களுக்கே தெரியும்.

என் குரு:
ரெய்க்கியையே பலர் கற்பித்தாலும், காசு ஆசை இல்லாத, ஸ்டுடண்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குரு இந்த காலத்தில் அரிது. வெளியில் மற்ற குருமார்கள்  ஐந்தாயிரம் பத்தாயிரம் என வாங்கிக்கொண்டிருக்கையில், ஈரோட்டில் உள்ள என் குரு 'சாய் ரெய்கி தியான மையம்' என்ற பேரில்  இந்த கலை அனைவருக்கும் பயனளிக்கட்டும் என்று மிகக்குறைந்த தொகையில் கற்பிக்கிறார். அது வாங்குவதும் மிகாவ் உசுயியின் கட்டளைப்படி இலவசமாக கொடுக்ககூடாது என்பதால். தொகை குறைவு - தரம் உயர்வு. (டிவியில் பேட்டி தரும் வேறு ஆசிரியரிடம் பயின்ற நான்  இவரிடம் மீண்டும் வந்து பயின்று நல்ல குருவின்  வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன்.) 

சில அனுபவங்கள்:
பெரிய பெரிய வாழ்க்கை பிரச்சனைகளில் இருந்து சப்ப மேட்டர் என்று நினைக்கும் அனைத்து விஷயங்களுக்கும் இந்த முறையை பயன் படுத்தலாம்.

  1. ஒரு லட்ச ரூபாய் பணம் கடனாக வாங்கிக்கொண்டு, பிறகு 'திருப்பி தர முடியாது. பண்ணுவதை பண்ணு' என்று மனசாட்சியே இல்லாமல் சொன்னவரிடம் இருந்து, எண்ணி ஒரே மாதத்தில் பணத்தை திரும்ப பெற்றார் ஒரு சேட்.
  2. சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன் வந்து சேர்ந்த ஒருவருக்கு, வங்கி கடனுடன், இடம் கிடைக்க வாய்ப்பே இல்லாத இடத்திலிருந்து நல்ல இடம் கிடைத்தது.
  3. நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கியவருக்கு, அரசாங்க உத்தியோகமே கிடைத்தது.
  4. அமெரிக்காவில் இருந்த ஒரு தமிழ் பெண்ணுக்கு கழுத்தில் பிரச்சனை. அந்த பெண்ணுக்கு தமிழ்நாட்டிலிருந்தே distant healing என்ற முறையில் சிகிச்சை அளிக்க, கழுத்து பிரச்சனை தீர்ந்தது.
  5. நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஒரு சாதாரண சாவி தொலைந்து போனால் கூட, இந்த தியான வழிமுறையில் உடனே கிடைத்து விடும். (Google Search Engine க்கு போட்டி :-)  )
                திருமணப்பிரச்சனை, மனக்குழப்பம், என எல்லா பிரச்சனைகளில் இருந்தும் நீங்கள் வெளி வர முடியும்.  இது எப்படி சாத்தியமாகும் என்று எண்ணிய விஷயங்கள் எல்லாம் சாத்தியமாகின்றன. இதை அறிவியல் ரீதியாக விளக்க இந்த சாதாரணமானவளால்  முடியாது. நிஜ வாழ்வில் நடக்கிறது. எப்படி என்று கேட்டால் என்ன சொல்ல? அதற்கான வார்த்தைகள் என்னிடம் இல்லை. தேடல் உள்ள நண்பர்கள் ரெய்கி சம்பந்தமான அறிவியல் விளக்கங்களுடனும் படங்களுடனும் கூடிய ஆங்கில தளங்கள் உள்ளன. அங்கே தேடிக் கொள்ளுங்கள் ப்ளீஸ்.. முக்கியமான விஷயம். நல்ல நேர்மறை எண்ணங்கள் மட்டுமே நிறைவேறும். சிலரின் ஆராவின் சக்தியை பொறுத்து விரைவில் நடக்கும் அல்லது தாமதமாகும்.
       
               அதிகமாக எழுதினால், பல்பொடி விளம்பரம் போல ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது. இந்த பதிவை விளம்பரமாக நினைக்காதீர்கள். ஒரு நல்ல விஷயம். நான் பலனடைந்தேன். இது உங்களுக்கும் உதவலாம். அவ்வளவே. விளக்கிலிருந்து விளக்கேற்றுவது போல.

யாரேனும் reiki channals இதை படித்தால் அவர்களும் தங்கள் கருத்துகளை  பதிவு செய்ய அழைக்கிறேன்.

பலர் ரெய்கி மையத்தின் முகவரி கேட்டதற்கு இணங்க இதோ (பதிவை எடிட் செய்து)  :
4, திரு.வி.க. வீதி,
முனிசிபல் காலனி ரோடு,
ஆந்திரா வங்கி அருகில்,
ஈரோடு -4.
தொலைபேசி எண் : 93616 25284