Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, May 24, 2011

கணவன் மனைவி ஜோக்ஸ்

 எப்படி போலீஸ் திருடன், டாக்டர் பேஷன்ட், ஜட்ஜ் குற்றவாளி ஜோக்ஸ் ரசிக்கப்படுகிறதோ, அவை அனைத்தையும் விட கணவன் மனைவி சம்பந்தமான ஜோக்ஸ் அதிகமாகவே ரசிக்கப்படுகிறது. நான் ரசித்த சில எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்கள் இவை. உங்கள் வீட்டில் நடந்திருந்தால் நான் பொறுப்பல்ல :-)

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்
மனைவி: நேத்துதான் அதை  சாப்பிட்டோம்
கணவன்: அப்படினா கத்திரிக்காய் வறுவல்
மனைவி:: உங்க பையனுக்கு பிடிக்காது
கணவன்:முட்டை பொறியல்? 
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்பு கெட்டுபோகும்
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போற?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி...



கணவன்: (பேப்பரை படித்தபடி) ஒரு நாளைக்கு ஆண்கள் 15,000 வார்த்தைகளையும் பெண்கள் 30,000 வார்த்தைகளையும் பேசுகிறார்கள் என்று ஒரு ஆய்வுக்குறிப்பு தெரிவிக்கிறது.
மனைவி: அது உண்மைதான். ஏன்னா, உங்களுக்கு நாங்க ஒவ்வொரு விஷயத்தையும் ரெண்டு தடவை சொல்ல வேண்டி இருக்குது.
கணவன்: என்ன?


(லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் )
கணவன் தன் மனைவியின் மொபைல் எண்ணை  எப்படியெல்லாம் ஸ்டோர் செய்து வைத்திருப்பான்?

திருமணமான புதிதில்  - MY LIFE
ஒரு வருடம் கழித்து - MY WIFE
இரண்டு வருடங்களுக்கு பிறகு - HOME
ஐந்து வருட முடிவில் - HITLER
பத்து வருஷம் கழித்து  - WRONG NUMBER

(அநேகமாக ஆண்களில் பலருக்கு இரண்டாவது ஜோக் புரிந்திருக்காது என்று நினைக்கிறேன். )

Saturday, May 21, 2011

'டிட்டு' போக 'டன்' வந்தான் - திகில் அனுபவம்

 
நேற்றிரவு நள்ளிரவில் விட்டு விட்டு  பவர் கட்... அம்மா, அப்பா மற்றும் நான் நல்ல உறக்கத்தில் இருந்தோம். சுமார் ஒரு  மணியளவில் கதவுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது. பிளாஸ்டிக் பேப்பரை கசக்குவது போல, இங்கும் அங்கும் இழுத்து செல்வது போல, என்று கலவையான சப்தங்கள். அப்பா சாப்ட் நேச்சர் ஆள். அம்மா ஓவர் பில்ட்அப் ஆள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வெளியே யாராவது ஆட்கள் இருப்பார்களோ என்று பயம் வந்தது...என்னை எழுப்பி விஷயத்தை சொன்னார்கள். என் ஸ்கூட்டியை மூடி வைத்திருந்த கவருக்குள் எலி புகுந்திருக்கும் அம்மா என்றேன். என் அப்பா ஜன்னலை திறந்து பார்த்துட்டு, 'கவர் அப்படியே தான் இருக்கு' என்றார். அதுக்கப்பறம் எனக்கும் பயம் வந்துடுச்சு. வெளி லைட்டை  போட்டா, சத்தம் இல்லை. off பண்ணினா உடனே சத்தம் வருது. ஜன்னல் வழியா வெளியே பார்த்தா யாரும் தெரியல. 

சரி, இரண்டு வீடு தள்ளி  இருக்கும் கஸினுக்கு போன் செய்தால் மொபைல் சுவிட்ச் ஆப். மூன்றாவது வீட்டில் இருக்கும் இன்னொரு அத்தைக்கு போன் செய்து கஸினை கூப்பிட சொன்னால், அத்தையும் அவர் வீட்டு கதவை யாரோ தட்டியது போல இருந்ததால் ஒரு மணி நேரமா தூங்காம பயத்தோட இருப்பதாக சொன்னார். வேறு வழி என்ன என்று யோசித்த போது, பக்கத்து வீட்டு அண்ணனின் மொபைல் நம்பரை என்றைக்கோ குறித்து வைத்தது நினைவுக்கு வந்தது. நடுநிசி இரண்டு மணிக்கு அந்த அண்ணனுக்கு போன் செய்தேன். 'அண்ணா, யாரோ எங்க வீட்டு காம்பௌண்டுக்குள் குதித்திருப்பது போல இருக்கு. நீங்க கொஞ்சம் வந்து வெளில இருந்து பாருங்கண்ணா. கதவை திறக்க பயமா இருக்கு' என்றேன். அந்த அண்ணனும் வந்து பார்த்துட்டு, 'யாரும் இல்லமா. வெளில வாங்க' என்றார்.

அதன்பின் கதவை திறந்து அப்பா வெளி கேட்டை திறப்பதற்காக அப்பா சாவியுடன் செல்ல,  பின்னாடியே நானும் அம்மாவும் வெளியே வந்தோம். திடீரென அம்மா, 'ஐயோ இதென்ன மூட்டை' என்று அலறினார். பார்த்தால் மிக சிறிய மூட்டை, உள்ளே ஏதோ ஒரு உயிருள்ள அல்லது உயிரிருந்த விஷயம் போல ஒன்று. 'போச்சு... யாரோ ஏதோ குழந்தைய கொன்னு நம்ம காம்பௌண்டுக்குள் தூக்கி போட்டுட்டு போய்ட்டானுங்க போல' ன்னு நான் பயந்து நடுங்க, அம்மா அது ஏதோ நாய் போல இருக்கு என்றார். உடனே, வெளில இருக்கற அப்பாவ பத்தி கவலை படாம, நானும் அம்மாவும் உள்ள வந்து தாள் போட்டுகிட்டோம் (ஸாரிப்பா). அதற்குள் அப்பா கேட்டை திறந்து விட்டதால் அந்த அண்ணன் உள்ளே வந்து மூட்டையை குச்சியால் தள்ளி திறக்க, நம்பவே முடியவில்லை..... உள்ளே ஐந்தடிக்கும் மேலே உயரமுள்ள, ஒரு இருபது வயதுக்கு மேலே உள்ள ஒரு ஆள்... அந்த காட்சியை நீங்க நேர்ல பார்த்திருந்திருக்கணும்... அந்த மூட்டை அவ்ளோ சிறுசு. அதுக்குள்ள அவ்ளோ உயர ஆள் இருப்பதை யாராலும் அனுமானிக்கவே முடியாது. அசையாம அவ்ளோ குறுகி படுத்திருந்தான்.
அதுக்கப்பறம்  அந்த அண்ணன் 'இவனா' என்று பழக்கப்பட்ட தொனியில் சொன்னார். பக்கத்து ஏரியா பையனாம். ஸ்பிரிட்டை போதைக்காக குடித்து குடித்து மூளை செயல் இழந்து விட்டதாகவும், நேற்று மதியம் தான் அவனை அவன் அப்பா எங்க ரோட்ல போட்டுட்டு போனதாகவும் சொன்னார். அவனுக்கு நடக்க வேறு வரவில்லை. முடவன். ஊர்ந்து ஊர்ந்து தான் வெளியேறினான். அவனிடம் அப்பாவும் அண்ணனும் 'எப்படி உள்ள வந்த? கேட் பூட்டி இருக்குல்ல?' என்றெல்லாம் கேட்டுகொண்டே வெளியேற்றினார்கள். அதற்கு அவன் இன்னொரு ஆள் தன்னை தூக்கி உள்ளே போட்டதாக கூற, மீண்டும் எங்களுக்கு பயம் வந்துவிட்டது. அந்த இன்னொரு ஆள் உள்ளேயே இருந்தால் என்ன செய்வது என்று அத்தை வீட்டுபக்கமும் தேட, கஸினை எழுப்பி போனை சுவிட்ச் ஆப் செய்ததற்கு திட்டி, விஷயத்தை கூற, எல்லா இடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது. எங்கும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டதும், இவன் போய்விட்டானா என்று பார்க்க வெளியே சென்று பார்த்தால் ஆளை காணோம். நன்கு உற்றுபார்த்தபோது அவன் சாக்கடைக்குள் இறங்கி அதன் வழியே நகர்ந்து செல்வது தெரிந்தது. (கவனிக்க. இனி திருடனை தேடுபவர்கள் சாக்கடை வழிகளிலும் தேடவும்).  மீண்டும் அவனிடம் சென்று விசாரிக்க, அவன் திருடுவதற்காக வந்திருப்பான் என்பதை விட புத்தி சுவாதீனத்தால் இப்படி தொந்தரவு செய்திருப்பான் என்று தோன்றியதால் விட்டு விட்டோம். அதன் பின் எங்கே தூக்கம் வருவது? எப்படியோ மூணரை மணிக்கு மேல் தூங்கினோம். மீண்டும் விடியற்காலை பத்தேமுக்காலுக்கு தான் நான் எழுந்தேன். அதற்கு பின் அம்மா சொன்னார் அவன் இன்னும் இரண்டு வீடுகளுக்கு சென்று, அங்கு காயவைத்திருந்த துணிகளை போட்டுகொண்டு, காலைகடனெல்லாம் கழித்து, அசிங்கம் செய்து, அங்கிருந்த திண்ணையில் தூங்கி, விடிந்ததும் அடி வாங்கி, ஒரு கடை வாசலில் படுத்துகொண்டான் என்று. நான் சென்று பார்த்தபோது ஒரு சாக்கு மூட்டைக்குள் தன்னை மடித்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான்... அவனிடம் திருட்டுத்தனமும் புத்திசுவாதீனமும் ஒருங்கே இருந்ததால் அவனை போலீசிடமும் பிடித்து கொடுக்க முடியவில்லை, விரட்டி அடிக்கவும் மனம் கேட்கவில்லை. எனவே மனவளர்ச்சி குன்றியோர் மையத்துக்கு போன் பண்ணி அனுப்பி வச்சாச்சு. 
சரி... இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு தான கேக்கறீங்க? அவனே ஒரு திருடன். திருட்டும் ஒரு மோசமான தொழில். அவனுக்கும், திருட்டுக்கும் எதுக்கு 'திரு'ன்னு போட்டு மரியாதை தரணும். அதான்....

Thursday, May 5, 2011

சில்ரன் ஆப் ஹெவன் (செருப்பை கேவலமா நினைக்காதீங்க)

'சில்ரன் ஆப் ஹெவன் ' படத்தை இப்போது தான் பார்த்து முடித்தேன். அதி அற்புதமான படங்களுள் ஒன்று என்பதை என்னாலும் மறுக்கவே  முடியாது. நிறைய பேர் மறுக்காததால தான் இந்த படம் பெஸ்ட் வெளிநாட்டு படம் னு ஆஸ்கர் அவார்ட் வாங்கி இருக்கு.  குழந்தைகள் உலகில் அவர்கள் பிரச்சனையை சமாளிக்கும் விதம், கோபம், ஏமாற்றம் என கலவையான விஷயங்களை கலந்து கட்டி இருக்கிறார் இயக்குனர். படத்தை பார்க்க ஆரம்பிக்கும்போது 'குழந்தைகள் பற்றிய படமா இருக்கே. மொக்க போட்டுட்டா என்ன பண்றது' என்ற எண்ணத்துடன் தான் பார்த்தேன். படம் முடியும்போது 'இந்த படத்தை போய் மிஸ் பண்ண பார்த்தேனே...' என்று என்னையே திட்டிக்கொண்டேன்.

கதை இதுதான்:
                         சுமார் பத்து வயதிருக்கும் அலிக்கு. அவன் தன் தங்கை சாராவின் செருப்பை தைத்துக்கொண்டு, காய்கறி கடையில் உள்ளே சென்று காய் வாங்கிக்கொண்டிருக்கிறான். காய்கறிக்கடை குப்பைகளை எடுத்துச்செல்லும் குப்பைவண்டிக்காரன், அலி வெளியில் வைத்துள்ள செருப்பு பையையும் குப்பை என்று எண்ணி எடுத்துச்சென்று விடுகிறான். காய் வாங்கிவிட்டு வெளியே வரும் அலி, செருப்பை காணாமல் தேடு தேடென்று தேடி, காய்கூடைகளை தள்ளிவிட்டு, கடைக்காரனிடம் திட்டு வாங்கி, எங்கும் செருப்பு கிடைக்காமல், வீடு வருகிறான். வீடு வந்ததும், செருப்பை கேட்கும் தங்கையிடம் அழுதுகொண்டே விவரத்தை கூறுகிறான். அவள் கோபம் வந்து அழுகையினூடே, 'அப்பாவிடம் சொல்லப்போகிறேன்' என்று மிரட்டுகிறாள். 'சொல்லு. சொன்னாலும் அப்பாவால என்னை அடிக்கத்தான் முடியும். உனக்கு புது செருப்பு வாங்கித்தர முடியாது' என்று குடும்பத்தின் ஏழ்மையை உணர்த்துகிறான். அதை உணர்ந்துகொள்ளும் சிறுமி சாரா, 'வேறென்ன செய்வது? ஸ்கூலுக்கு செருப்பு போடாமல் போக முடியாது தெரியுமா?' என்கிறாள். அலி 'என் ஷூவை போட்டுக்கொண்டு உன் காலைநேர ஸ்கூலுக்கு போ. ஸ்கூல் விட்டதும் அதை நான் போட்டுக்கொண்டு என் மதிய நேர ஸ்கூலுக்கு போறேன்' என்று சொல்லி, ஒரு புது பென்சிலை லஞ்சமாக தருகிறான். சாராவும் ஒப்புக்கொள்கிறாள்.
 
                           தினமும் காலை சாரா அண்ணனின் ஷூக்களை போட்டுக்கொண்டு நடந்து பள்ளிக்கு போவதும், மதியம் பள்ளி முடிந்ததும் ஓட்டமாக ஓடி வந்து, காத்துக்கொண்டிருக்கும் அண்ணனுக்கு ஷூக்களை திருப்பி தருவதும், அலி அவற்றை அணிந்துகொண்டு பள்ளிக்கு தாமதமாக போவதும் நடக்கிறது. இது எதுவுமே மஜீத்தில் வேலை செய்யும் அப்பாவுக்கும், நோயாளியாக இருக்கும் அம்மாவுக்கும், கைக்குழந்தையாக இருக்கும் கடைசி தங்கைக்கும் தெரியாது. 
                            பள்ளி செல்லும் சாரா டீச்சர் செருப்பை பற்றி பேசும்போது, தன் ஷூக்களை மறைக்க முயற்சி செய்வதும், டீச்சர் ஷூ போட்டவர்களை பாராட்டும்போது, தைரியமாக, முகத்தில் பெருமை பொங்க நிற்பதும் கவிதை. ஒரு நாள் பிரேயரில் எப்போதும் போல எல்லாருடைய ஷூக்களையும் ஏக்கத்துடன் பார்க்கும் சாரா, தன் பழைய செருப்புகளை  யாரோ ஒரு சிறுமி அணிந்திருப்பதை பார்த்து அதிர்கிறாள். லஞ்ச் ப்ரேக்கில், பள்ளி விட்டதும் என அவளை பின்தொடரும் சாரா அவள் வீட்டை கண்டுபிடித்து அண்ணனை கூட்டி வருகிறாள். அப்போது கதவு திறக்கிறது. உள்ளே இருந்து அந்த சிறுமியும் அவள் கண்ணில்லாத அப்பாவும் வெளியே வருகிறார்கள். இதை ஒளிந்திருந்து பார்க்கும் அலியும், சாராவும் பரிதாபப்பட்டு செருப்பை கேட்காமலே வீடு திரும்புகிறார்கள். 
 
                   அந்த சிறுமியின் அப்பா அன்று அவளுக்கு புது செருப்பை வாங்கித்தர, அவள் அம்மா மீண்டும் சாராவின் செருப்பை குப்பைவண்டிகாரனிடம் போட்டு விடுகிறாள்.  அடுத்த நாள் பள்ளியில் இருந்து வரும் வழியில் தவறவிட்ட பேனாவை சாராவிடம் திருப்பி கொடுத்து அந்த சிறுமி பிரெண்ட் ஆகிறாள். புது ஷூவை அணிந்து வரும் அவளிடம் பழைய ஷூவை பற்றி விசாரிக்கும் சாரா, 'அதை தூக்கிபோட்டு விட்டோம்' என்று அந்த சிறுமி சொன்னதும் 'ஏன்?' என்று உரிமையுடனும் கோபத்துடனும் கேட்பது அருமை. 'அது கிழிஞ்சுடுச்சு. அதான்' என்று அந்த சிறுமி பயந்துகொண்டே சொல்ல, அவளை சாரா மன்னிக்கிறாள்.
                
                 முதல் முறையாக தோட்ட வேலை செய்து பார்க்க செல்லும் தந்தையுடன், உதவிக்கு அலியும் போகிறான். பங்களாக்களாக இருக்கும் தெருவில் நுழைகிறார்கள். அங்கே ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு பொத்தான் உள்ளது. காலிங் பெல் போல. அதை அழுத்தி வீட்டில் உள்ளவர்களிடம் 'உங்களுக்கு தோட்ட வேலை செய்ய ஆள் வேண்டுமா?' என்று கேட்கிறார்கள். ஒரு வீட்டில் மட்டும் அழைக்கப்படுகிறார்கள். அலி அந்த வீட்டில் உள்ள சிறுவனுடன் விளையாட, அவன் அப்பா தோட்ட வேலை செய்கிறார். சிறுவனின் தாத்தா கைநிறைய பணம் தர, அலிக்கும் அவன் அப்பாவுக்கும் பெருமகிழ்ச்சி. சைக்கிளில் வர வர என்னென்ன பொருள்களை வாங்கலாம் என்று அப்பா லிஸ்ட் போட, அதில் சாராவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை வாங்க சொல்லி சிபாரிசு செய்கிறான் அலி. இப்படியே பேசிக்கொண்டு வருகையில், சைக்கிளில் ப்ரேக் வேலை செய்யாமல் போக, இருவரும் கீழே விழுந்து, சைக்கிள் உடைந்து, அதையும் ஏற்றிக்கொண்டு ஒரு மினிடோரில் வீடு வந்து சேர்கிறார்கள். வாங்கிய காசானது , இந்த செலவு, மருத்துவ செலவு, கடனை திருப்பித்தர வேண்டிய நிலை போன்றவற்றிலேயே வெகுவாக குறைந்துவிட, ஏமாற்றத்துடன் உறங்குகிறான் அலி.

                          அடுத்த நாள் பள்ளியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளப் போகிறவர்களின் பட்டியல் வெளியாகிறது. கூடவே பரிசு பற்றிய அறிவிப்பும். தன் கிழிந்த ஷூக்களை கொண்டு போட்டியில் பங்குபெறுவதை தவிர்த்த அலி, மூன்றாவது பரிசாக ஷூக்கள் கிடைக்கும் என்பதை அறிந்ததும், விளையாட்டு ஆசிரியரிடம் போய் அழுது, கெஞ்சி கூத்தாடி, ஜெயிப்பேன் என்று சத்தியம் வேறு செய்கிறான். இவன் பிடிவாதத்தையும் உறுதியையும் பார்த்து இவனை ஓட வைத்து பார்க்கும் அவர், இவன் தகுதியானவன் என்று பந்தயத்தில் இவனையும் சேர்த்துக்கொள்கிறார்.
                          வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் வந்து தங்கையிடம் விஷயத்தை சொல்ல, அவள் 'பசங்க போட்டுக்கற ஷூ எனக்கு பிடிக்காது' என்கிறாள். 'ஷூவை கடையில் குடுத்து மாற்றிக்கொள்ளலாம்' என ஆறுதல் சொல்லும் அலியிடம் 'நீ முதல் பரிசு ஜெயித்து விட்டால் என்ன செய்வது?' என்று கேட்க, 'இல்லை, நான் மூன்றாம் பரிசு மட்டுமே ஜெயிப்பேன்' என்று உறுதி கூறுகிறான். 
போட்டி நடக்கும் இடத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பலவிதமாக தங்களை தயார் படுத்திக்கொண்டிருக்கிறார்கள், விதவிதமான ஷூக்களை அணிந்து. மனதிற்குள் தன்னை வலுவேற்றிக்கொண்டு போட்டியில் கலந்து கொள்கிறான் அலி.
 
மிகுந்த முயற்ச்சிக்கு பின் எல்லோரையும் பின்னுக்கு தள்ளிக்கொண்டு ஓடும் அலி, தனக்கு முன்னே யாரும் இல்லாததை கண்டு மெதுவாக இரண்டு பேரை மட்டும் முன்னே விடுகிறான். மூன்றாவதாக வரும் இவனை ஒரு பையன் தள்ளி விட, வேறு வழியின்றி இன்னும் வேகமாக ஓடுகிறான். பின்னணியாக வெறும் ஷூக்களின் சப்தங்களும், அலியின் மூச்சிரைப்பும், சில இடங்களில்  ஷூ சம்பந்தமாக தங்கையின் வார்த்தைகளும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது அற்புதம். ஒரு வழியாக வெற்றிக்கோட்டை தொட்டதும் அவன் கேட்கும் ஒரே கேள்வி 'மூன்றாவதா சார்?' என்பது தான். 'மூணாவதா? நீ முதல் பரிசே ஜெயிச்சுட்ட' என்று விளையாட்டு ஆசிரியர் சொல்ல, அப்போதிலிருந்து அலியின் கண்களில் கண்ணீர் வர தொடங்குகிறது. போட்டோக்ராபர் அலியை தனியாக எடுக்கும் போட்டோவின் பின்னணியில் உள்ளது ஒரு ஜோடி ஷூ. 

                   அடுத்த காட்சியில் அலியின் அப்பா, அலிக்கும் சாராவுக்கும் புது ஷூக்களை கடையில் வாங்கிக்கொண்டு வீடு வருகிறார். இதை அறியாமல் வீட்டில் தங்கச்சி பாப்பாவுக்காக பால் பாட்டில் கழுவிக்கொண்டிருக்கும் சாரா கதவை யாரோ திறக்கும் சப்தம் கேட்டு திரும்பி பார்க்கிறாள். அலி தொங்கிய முகத்துடன் உள்ளே வருகிறான். இவளருகில் வந்ததும் தலைகுனிந்தவாறு ஒரு பெருமூச்சு விடுகிறான். ஷூ கிடைக்கவில்லை என்று புரிந்துகொண்ட சாராவை தங்கையின் அழுகுரல் அழைக்கிறது. உள்ளே ஓடி விடுகிறாள். தண்ணீர்தொட்டி அருகில் உட்கார்ந்து தன் கிழிந்து, பிய்ந்து போன ஷூவை தூக்கி எறியும் அலி, சாக்ஸை கழற்றுகிறான். கால் கொப்புளங்களாலும், புண்கள் நிறைந்தும் இருக்கிறது. கால்களை தண்ணீர் தொட்டிக்குள் வைத்துக்கொள்ள, அதில் உள்ள மீன்கள் அலியின் கால்களை சுற்றுகின்றன. இத்துடன் படம் நிறைவடைகிறது.
 
                   வார்த்தைகளால் இந்த கதையை அறிவதை விட, விஷுவலாய் பார்க்கும்போது மனம் கனக்கிறது. பள்ளி செல்லும் வழியில் அண்ணனின் பெரிய சைஸ் ஷூ சாக்கடையில் விழுந்துவிட, அங்கே துடித்துக்கொண்டு ஷூவின் பின்னே செல்வது சாரா மட்டுமல்ல நாமும் தான். லேட்டாக வந்து ஹெச்.எம்மிடம் மாட்டிக்கொள்ள கூடாது என்று நினைப்பது அலி மட்டுமல்ல. நாமும் தான். ஓட்ட பந்தயத்தில் அலி ஓடியே ஆக வேண்டும் என்று நாமும் தான் அவனுடன் ஓடுவோம். இந்த வரிகளை படம் பார்த்த அனைவரும் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். அருமையான படம். நீங்களும் பாருங்கள்..