Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, December 28, 2012

சமீபத்தில் ஒரு பாடல் கேட்டேன். மால்குடி சுபா குரலில் அத்தனை உருக்கம்... காதல் கொண்ட ஒரு பெண்ணின் சோகமும்,விரக்தியும்,பயமும் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.  இந்த வரிகளை ரசிக்க நினைத்தால் ஒரே பாடலின் வரிகளாக (I mean தொடர்ச்சியாக) எடுத்துக்கொள்வதை விட  இரண்டிரண்டு வரிகளாக எடுத்து பிரேக் விட்டு ரசியுங்கள். நல்லா இருக்கும்.
song upload செய்ய முயற்சி பண்ணினேன். சரியா வரல. யாராவது லிங்க் கொடுத்தால் போட்டுடறேன்.


பாடல்:
பூ மீது யானை
பூ வலியை தாங்குமோ... 

தீ மீது வீணை
போய்  விழுந்தால் பாடுமோ... 

போ என்று சொன்னால்
வரும் நினைவும் போகுமோ... 

போராடும் அன்பில் அட
ஏன்தான் காயமோ...

கண்ணீர் கவிதைகள்  எந்தன் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளாய் எந்தன் கன்னம் நிறையுதே... 

இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே...
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே...

autumn, wallpaper, fantasy, wallpapers

ஹே... உடைத்து பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே...

குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில் உடையாதே..

உடைத்து பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே...

குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில் உடையாதே.. 

காதல் போலவே நோயும் இல்லையே  யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும் கேட்கவில்லை நானே...விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ

விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம் போலவே வலி தருமோ...

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ

விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம் போலவே வலி தருமோ...

வேறு வேறென  நினைவு போகையில்
காதல் கொள்தல் பாவம்

அது சேரும் வரையிலே
யாரும் துணை இல்லே
ஆதி கால சாபம்...

வேகமா படிக்காதீங்கன்னா கேக்க மாட்டீங்களே... இப்படி படிச்சா இந்த பாடலில் உள்ள வலி எப்படி புரியும்? ம்? ஸ்க்ரோல் பண்ணி மேல போய்  மறுபடி படிங்க.


படம்: டிஷ்யூம்
இசை: விஜய் ஆன்டனி
பாடல்: புகழேந்திFriday, November 2, 2012

வெங்காளிமிளப்பு செய்யலாமா?

 நானும் குடும்ப இஸ்திரி ஆயிட்டேன்ல. ஒரு சமையல் குறிப்பாவது குடுத்தா தான இந்த உலகம் என்னை நம்பும் என்பதற்காக இந்த பதிவு.

சூடா சப்பாத்தி போட்டுக்கலாம். ஆனா தொட்டுக்க  குழம்பு, குருமா, சட்னி என்று ஏதாவது செய்ய வளையாது. இந்த மாதிரி சமயத்தில் சட்டென்று சமைக்க ஒரு ரெசிபி.

ஒரு பெரிய வெங்காயத்துக்கு ஒரு தக்காளி என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நீள வாக்கிலும், தக்காளியை சிறு சிறு துண்டங்களாகவும் நறுக்கிக்கொள்ளுங்கள். புதிதாக பழகுபவர் எனில் Chop board இல் கத்தியை கொண்டு நறுக்கினால் வேலை வெகு விரைவில் முடியும்.

அடுப்பில் வாணலியை வைத்து 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கட் செய்து வைத்துள்ள வெங்காயத்தை நன்கு வதக்கிக்கொள்ளவும். இனி பிரவுன் கலர் வரப்போகிறது என்று தெரியும் சமயத்தில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். 1 வெங்காயம் = 1 தக்காளி = 1/2 டீ ஸ்பூன் உப்பு என்ற கணக்கில் உப்பு சேர்க்கவும்.

1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் கோபுரம் போல எடுத்துக்கொள்ளவும். மிளகாய் பொடியை சேர்த்ததும் மறக்காமல் ஸ்டவ்வை குறைந்த தீயில் வைத்து வனக்கவும். இல்லாட்டி மிளகாய் தூள் பாத்திரத்திலேயே ஒட்டிக்கொண்டு டிஷ்ஷை கருக்கி விடும். மிளகாய் தூளின்  பச்சை வாசனை போனதும் இறக்கி விடவும்.

சப்பாத்தியை சுட்டு எடுத்ததும் இந்த கலவையை நடுவில் கொஞ்சம் வைத்து சப்பாத்தியை ரோல் செய்து பரிமாறவும்.

வெங்காயம் தக்காளி மிளகாய்த்தூள் உப்புசேர்ந்ததால் இதற்கு வெங்காளிமிளப்பு ன்னு பேர் வெச்சுட்டேன். எப்புடி !!!! (No bad words)

 நீட்டி நெளிச்சு செஞ்சா இதை செய்ய கால் மணி நேரம் ஆகும். நானா ட்ரை பண்ணி செஞ்சு பார்த்து  எங்க வீட்டுக்காரருக்கு கொடுத்தா அவர் 'அருமை அருமை' என்று சாப்டுகிட்டே இருந்தார். அந்த நம்பிக்கைல இந்த பதிவை போட்ருக்கேன்.

ஈசியா? கஷ்டமா என்று செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க
ஒரு வேளை  இந்த உணவில் நீங்கள் எதிர்பார்த்த அளவு ருசி இல்லையென்றால் அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். அதில் என் கைமணம் இல்லை என்பதே அந்தக் காரணம்  ;)

Sunday, September 23, 2012

"ஏய்... நீ சுத்தற மிட்டாய் சாப்பிட்டிருக்கியா?"

"ஏய்... நீ சுத்தற மிட்டாய் சாப்பிட்டிருக்கியா?"
சாக்லேட் விளம்பரத்தை பார்த்துக்கொண்டிருந்த என் கணவர் திடீரென கேட்டார். சட்டென பிடித்த மழை போல என் குழந்தை பருவ குதூகலம் என்னை நனைக்க தொடங்கியது. முகம் முழுக்க சந்தோஷத்துடன் "ஓ.... " என பதில் சொல்வதில் ஆரம்பித்த எங்கள் உரையாடல் யார் யார் என்னென்ன வகையான மிட்டாய்களை சாப்பிட்டிருக்கிறோம் என்ற போட்டி களைகட்டியது.

 பட்டன் போன்ற மிட்டாயின் நடுவில் நூல் கோர்க்கப்பட்டு சுற்றி வைக்கப்பட்டிருக்கும் சுத்தற மிட்டாயை வாங்கி  ரெண்டு கைகளிலும் உள்ள நடுவிரல்களில்  நூலை நுழைத்துக்கொண்டு விர்விர்ரென்று வேகமாக முன்னும் பின்னுமாக சுற்றி, ரெண்டு கைகளையும் விலக்க, நூல் வேகமாக ஒரு vibration உடன் சுற்றும். அவ்வப்போது நூலுடனே அந்த மிட்டாயைச் சப்பிக்கொண்டு, மீண்டும் வெளியில் எடுத்து மீண்டும் விளையாட்டு என விளையாடிக்கொண்டே சாப்பிட்ட அந்த மிட்டாயை மறக்க முடியுமா?

கருப்பு கலரில் இருந்து ரோஸ், ஆரஞ்சு, பச்சை என கொஞ்ச நேரத்துக்கு ஒரு கலர் என்று கலர் மாறும் மிட்டாயும் நினைவுக்கு வருகிறது.

வாயெல்லாம் ரோஸ் கலர் வழிய கடைவாய் பற்களில் அழுத்தமாக ஒட்டிக்கொள்ளும்  மிட்டாயை 'அவ் அவ்' என்று அழுந்தி கடித்தே கரைத்த ஜவ்வு மிட்டாய் இன்னும் நினைவில் இருக்கிறது. நான் என் அத்தை பெண்ணுடன் 'குட்  ஷெப்பர்ட்' ஸ்கூலில்  படித்த போது வழியில் உள்ள செட்டியார் கடையில் வாங்கி வீடு வரும் வரையில் சாப்பிட்டது யு.கே.ஜி.யில் என்றாலும் இன்னும் மறக்கவில்லை.

கலைமகள் ஸ்கூல் அருகே ஒரு தாத்தா கை தட்டும் பொம்மையை  வைத்து கூப்பிட்டு அதன் காலாக மாறிவிட்ட பம்பாய் மிட்டாயை இழுத்து கையில் வாட்ச் கட்டி, கழுத்தில் செயின் போட்டு கன்னத்தில் கொசுறாக ஒரு இழுக்கு இழுக்கி கொசுறு தரும் போது பெருமையா இருக்கும். பசங்கன்னா செயினுக்கு பதில் மீசை கிடைக்கும்.

சளி மிட்டாய் என்றொரு மிட்டாய். சளி பிடிக்காத மிட்டாய் என்று பேர் வைத்திருக்க வேண்டியது. இப்படி மாறி விட்டது. இதுவே தான் சூடம் மிட்டாய் என்றும் பேர் கொண்டது என்று நினைக்கிறேன். கண்ணாடி போன்ற நிறத்தில் விக்ஸ் ஆக்க்ஷன்  மாத்திரையின் வடிவத்தில் அதிக இனிப்பில்லாம இருக்கும். இனிப்பு குறைவு என்பதால் அது என் சாய்ஸில்  வந்ததில்லை.

உண்மையான தேன்  மிட்டாய்.... தேங்காயிலோ எதிலோ செய்யப்பட்டு நடுவில் தேன்  ஊறிக்கொண்டிருக்கும் மிட்டாயே தேன்  மிட்டாய். இப்போது சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த மிட்டாயில் தேன்  இருப்பதில்லை. சர்க்கரை பாகே இருக்கிறது.

கடுக்காய்  மிட்டாய் என்று ஒரு மிட்டாய் கிடைக்கும். பிரவுன் கலரில்  இருக்கும். வாயில் போட்டதும் பச்சென்று ஒரு வாசம் பரவும் . போதும் போதுமென ஊறவைத்து கடித்தால் தேங்காயில் செய்தது என்று தெரிய வரும்.

பீடா மிட்டாய் என்றொரு வகையும் உண்டு. ரோஸ் கலரில் இருக்கும். வாயில் போட்டதும் இது வெத்தலை போட்டது போல வாயை சிவக்க வைத்து விடும். மூணாவது படிக்கறப்ப எங்க கிளாஸ்ல இருந்த ரெண்டே பசங்கள்ல  ஒருத்தனான சச்சு மைதீன் பேச்சை கேட்டு வாட்டர் பாக்ஸில் ரெண்டு மிட்டாயை போட்டு,  நாள் முழுக்க மிதமான இனிப்பு தண்ணீரை குடித்தது இப்போது இதழோர நகையை கொண்டு வருகிறது.


கம்மர்கட் ..... கடிக்க முடியாத உறுதியுடன் இருக்கும் அருமையான மிட்டாய். வட்ட வடிவத்தில் இருக்கும். வாயில் ஒரு பக்கம் அதக்கிக்கொண்டு, எனக்கு காயமாகி வீங்கிடுச்சு என்று பொய் சோகத்துடன் குறும்பாக நடிப்போம். பதிலுக்கு அம்மாவிடமிருந்து  பொய் ஆறுதலும் கிடைக்கும்.

 தமிழனின் பெயரிடும் திறமைக்கு சான்றாக விளங்குவது எலி புழுக்கை மிட்டாய் ... அதாங்க சீரக மிட்டாய். சைஸையும் உருவத்தையும் பார்த்து பயபுள்ளைங்க அப்படி ஒரு பேர் வெச்சிருக்கோம்.

இது எல்லாத்துக்கும் ராஜா  ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு சுளை வடிவில் இருக்கும் எல்லா கலரிலும் கிடைக்கும் பெரும்பாலான பிறந்த நாள் கொண்டாட்டங்களில் இந்த மிட்டாயே கொடுக்கப்படும். காகிதத்தில் சுற்றிய சாக்லேட்டுகள் கொடுத்தால் அவங்க பெரிய ஆள்.

குறிப்பு : கூகுளில் இந்த இனிப்பு குறித்த படங்கள் எதுவும் கிடைக்காதது வருத்தமே. . .

இந்த பதிவை இடும்போது சில மிட்டாய்களின்  பேர் மறந்து போய்டுச்சு. என்னோடு சேர்ந்து கூத்தடித்த கஸின்களிடம் தனித்தனியாக கேட்டேன். போனை எடுத்தது எப்போதும் போல பார்மாலிடியாக பேச ஆரம்பித்தவர்கள் 'டேய், சுத்தற மிட்டாய் மாதிரி நாம என்னென்ன மிட்டாய்ங்க  சாப்பிட்டோம்?" ன்னு  கேட்டதும் சொல்லி வைத்தது போல அத்தனை பேரின் குரலிலும் அவர்களின்  குழந்தை பருவம் குபுக்கென வெளியே கொட்டியது. லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவனாகட்டும், கலைஞர் டிவி ஒளிப்பதிவாளராகட்டும், திருமணம் ஆகாதவனாகட்டும், பதின்ம வயதில் பையன் உள்ளவராகட்டும், அதெல்லாம் Doesn't matter என்பதாக அந்த குதூகலம் இருந்தது . 'இது இந்த மிட்டாய். இது இப்படி இருக்கும். இல்ல இல்ல . இப்படி இருக்கறது அந்த மிட்டாய். இந்த மிட்டாயை இப்படியும் சொல்லலாம்' என்றெல்லாம் அந்த பேச்சு நீண்டது. இந்த நாள் முழுக்க அவர்களுடைய குழந்தை பருவம் அவர்களோடு இருக்கலாம். மேலே குறிப்பிட்ட எல்லா இனிப்பையும் மறந்தாலும் அவர்களின் குரல்களில் இருந்த இனிப்பு என்றும் எனக்கு மறக்காது.


 

Sunday, August 19, 2012

என் விகடனில் சாதாரணமானவள்

எல்லாம் பாத்துக்கங்க.. நானும் ரௌடி தான் ... நானும் ரௌடி தான்....

வெகுநாள் கனவு பலித்தது....

ஏ டண்டணக்கா ஏ டனக்குனக்கா பார்ட் 2

இப்படி எதை வேணும்னாலும் தலைப்பா வெச்சுக்கங்க. நான் அவ்ளோ சந்தோஷத்துல இருக்கேன். கல்யாணம் ஆனதும் நல்ல மாற்றம் வரும்னு ஜாதகத்துல சொன்னாங்க. அது  என் எழுத்து பணியிலங்கறது (?!) இப்பதான் தெரியுது.

என் பெயர் என் ஆத்மநண்பன் 'ஆனந்தவிகடன்' ல வரணும்னு ரொம்ப ஆசை ஆனா கேள்விபதில் எழுதி போட கூட  இதுவரை முயற்சித்ததில்லை. இத்தனை வருஷம் கழித்து நான் கவிதை (ன்னு நினைச்சு) எழுதியதை மட்டும் இன்டர்நெட் வசதி இருந்ததால் அப்பப்ப மெயில் பண்ணுவேன். என் மொபைல்க்கு ' தங்களின் பங்களிப்பு ஆசிரியர் குழுவின்  பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தொடர்ந்து உங்களுடைய பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்  கொள்கிறோம். நன்றி' அப்படின்னு ஒரு மெசேஜ் வரும். அவ்ளோ தான்.

விகடன்ல வலையோசை தொடங்கியதும், அட, நமக்கே நமக்குன்னு ஒரு வாய்ப்பு தராங்கன்னு அதுக்கும் அப்ளை பண்ணினேன். ஒவ்வொரு வாரமும் விகடனை வாங்கறது, இந்த வாரமும்  நம்மோடது இல்லைன்னு பொக்குனு போறதுன்னு நடந்துட்டே இருந்துச்சு.


திடீர்னு முந்தாநேத்து ஈரோடு கதிர் சார் கிட்ட இருந்து ஒரு போன் கால். அவர் எப்படி என் நம்பர சரியான ஆள் கிட்ட இருந்து வாங்கினாரோ... ஆச்சரியம்... இந்த வாரம் உங்களோட பதிவை 'ஆனந்தவிகடன் வலையோசை'ல போடலாமான்னு கேக்கறாங்க. உங்களுக்கு ஓகேன்னா விகடன் ஆபீஸ் ல இருந்து பேசுவாங்கன்னு ' சொன்னார். நான் மயங்கி விழாத குறை. எங்க மாமியார் மட்டும் என் பக்கத்துல இல்லைனா, நிஜமா 'மௌனம் பேசியதே' ல சூர்யா 'Hey Hey... come on aacha' பாட்டுக்கு ஒரு ஆட்டம் போடுவாரே... அப்படி ஒரு ஆட்டம் போட்டிருப்பேன். நான் ஒரு அடக்கமான மருமகள்ங்கறதால (ஹிஹிஹி) அடக்கி வாசிச்சுகிட்டேன்.


அப்பறம் விகடன்ல இருந்து கூப்பிட்டாங்க. 'ஏதோ சுமாரா எழுதறீங்க. கொழந்த புள்ள பொக்குனு போறீங்கலாம். பொழச்சு போங்கன்னு விகடன்ல உங்க தளத்தை அறிமுகப்படுத்த போறோம். என்ஜாய் பண்ணுங்க'ன்னு சொன்னாங்க. என்னோட ஒரே பேட் லக் என்னன்னா இந்த வாரத்திலிருந்து என் விகடன் ஆன்லைன்ல மட்டும் தான் வருமாம். (என்ன கொடுமை சரவணன்.....)

இதோ இந்த லிங்க் ல போனா நீங்களும் பார்க்கலாம்..
http://www.vikatan.com/envikatan/article.php?aid=22889&sid=614&mid=32

'

Wednesday, August 8, 2012

எது கவிதை ?

 
மடக்கி எழுதினால் கவிதை
மடக்காமல் எழுதினால் கட்டுரை
என்கின்றனர் ஒரு சாரார்

மடக்கி மடக்கி எழுதினால் அது மடக்கி
கவித்துவமாக எழுதினால் அது கவிதை
என்கிறார்கள் இன்னொரு சாரார்

கவிதைக்கும் கணக்குகள் உண்டு
கண்டபடி எழுதினால் அது கவிதையா?
சண்டைக்கு வருகிறார்கள் இன்னும் சிலர்

என்ன செய்வது?
உலகத்தின் முதல் கவிதை
என்னால் எழுதப்பட வாய்த்திருக்கவில்லை...

Tuesday, August 7, 2012

புதிய பதிவர்களுக்கு சின்ன வழிகாட்டி பதிவு

முந்தைய பதிவுகள்:
ப்ளாக் எழுதுவது எப்படி?
ப்ளாக் எழுதுவது எப்படி? இரண்டாம் பாகம்
New post சம்பந்தமான டிப்ஸ்

புதிதாக ப்ளாக் எழுத வருபவர்கள் தங்களுக்கென்று தனி தளத்தை உருவாக்கிக் கொள்வது  எளிதே. ஆனால் தங்கள் தளத்துக்கு மற்றவர்களை வரவைப்பது எப்படி என்பது தெரியாமல் குழம்புவார்கள். ரொம்ப சிம்பிள்ங்க. உங்கள் தளத்தை திரட்டிகளுடன் இணைக்க வேண்டும். இதற்கென்று பதிவுலகில் பிரபலமான திரட்டிகளாக இன்ட்லியையும், தமிழ்மணத்தையும் ஆனந்த விகடன் எனக்கு அறிமுகப்படுத்தியது.
https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcQuGd-EaJ231Uzkttii3__iC21ObNHjSQ3Z5HbpcTsvjmPe_eD3JA
 
 
எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, ஒரு தளத்தை உருவாக்கியதும் ஆசையாக கூகுளில் போய் டைப் செய்து பார்த்தேன். வரவில்லை. எனக்கோ குழப்பம். சரி, பதிவாவது போடுவோம். யாராவது கமென்ட் போடுவாங்கன்னு வெயிட் பண்ணினேன். அந்த பக்கமா யாராவது வந்துட்டு போனதுக்கு கூட அறிகுறி இல்லை. அந்த சமயத்துல ஆனந்தவிகடன் ல ஒரு ஆர்டிகிள் வந்திருந்தது. அதில் தான் மேற்கண்ட திரட்டிகள் எனக்கு அறிமுகம் ஆகின.

 நாம் பதிவு எழுதினா பத்தாது, அதை படிக்க ஆளுங்க வரணும். அப்படி வரணும்னா எல்லாரும் வரும் இடத்தில நம்ம சரக்கை வைக்கணும். ஆயிரம் பேர் வர்ற இடத்துல ஒரு பத்து பேர் உங்க பதிவு பார்க்க வரமாட்டாங்க? அதுல ரெண்டு பேர் கமென்ட் போட மாட்டாங்க? அதனால நீங்க பதிவு எழுதினதும் உங்க பதிவை இது போன்ற திரட்டிகளில் இணையுங்க. இது ரெண்டு மட்டும் தான் திரட்டின்னு மத்ததுல இணைக்காம போய்டாதீங்க. மத்த பிரபல பதிவர்களுடைய பதிவுகளுக்கு கீழே இது போன்ற திரட்டிகளின் ஓட்டுப் பட்டை இருக்கும். அந்த திரட்டிகளை கூகுளில் டைப் செய்து அவற்றில் மெம்பர் ஆகிக்கொள்ளுங்கள். இனி நீங்கள் ஒவ்வொரு பதிவு போட்ட பின்பும், திரட்டிகளின் தளத்தில் submit செய்துவிடுங்கள். உங்க பதிவு பிடிச்சிருந்தா, படிச்சவங்க வோட்டு போட்டுடுவாங்க.
ஓட்டு போடறதுல என்ன நன்மைன்னு கேக்கறீங்களா? நிறைய பேர் வோட்டு போட்டா உங்க பதிவு அந்த திரட்டிகளின் முதல் பக்கத்துலயே உங்க பதிவை காட்டும். குறைவான வோட்டுனா கடைசி பக்கங்களில் காட்டும். இன்னும் சொல்லப்போனா உங்க தளத்துல விளம்பரம் தர வாய்ப்பு கேட்டு பெரிய பெரிய நிறுவனங்கள் உங்க கதவை தட்டும். ஆனா அதுக்கு நீங்க இங்கிலீஷ்ல பதிவு எழுதணும் . தமிழ்ல பதிவு எழுதினா விளம்பர லட்டு கிடைக்காது.
மேலும் ப்ளாக் எழுதுவது சம்பந்தமா ஏதாவது டவுட் வந்தா தயவு செஞ்சு என்னை கேக்காதீங்க. நான் அந்த அளவு எக்ஸ்பர்ட் இல்ல. நல்லா தெரிஞ்ச நண்பர்கள் இது குறித்து நிறைய பதிவு இட்டிருக்கிறார்கள் எனக்கு சந்தேகம்னா www.bloggernanban.com ல பார்ப்பேன். (இன்னும் நிறைய நண்பர்கள் உங்களுடைய தளங்களில் எழுதி இது சம்பந்தமா இருந்தால் இங்கே குறிப்பிடலாம் )

ஓகே... இப்ப களம் இறங்குங்க நண்பர்களே !All The Best!

Saturday, August 4, 2012

ரொம்ப நாள் ஆகிடுச்சுல்ல....

அட போங்க பாஸ்.... உப்பு விக்க போனா மழை வருது. மாவு விக்க போனா காத்தடிக்குதுங்கற கதையாகி போச்சு நம்மளோடது. நாம TNPSC அப்ளிகேஷன் fill பண்றது எப்படின்னு பதிவு போட்டா நெட்ல பதிவு பண்ண சொல்லிடறாங்க நாம ப்ளாக் எழுதறது எப்படின்னு பதிவு போட்டா பிளாக்கர் டெம்ப்லேட்டயே மாத்திடறாங்க பேசாம மத்திய அரசுக்கு சப்போர்ட் பண்ணலாமான்னு இருக்கேன். யார் கண்டா? ஆட்சி மாற்றம் வந்தாலும் வந்துடும்ல..

அப்பறம்....
நல்லபடியா கல்யாணம் முடிஞ்சுடுச்சு...
ஆடி மாசத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன்...
எல்லா சொந்தக்காரங்களையும் ரொம்ப நாளைக்கப்பறம் பார்க்கற மாதிரி பில்ட் அப் குடுத்து புது பொண்ணுங்கற சீன் போடறேன். ..
எப்படா ப்ளாக் பக்கம் வருவோம்னு இருந்தேன்.
வந்து பார்த்தா... 'இப்படி' போயிட்டு 'அப்படி' வரதுக்குள்ள எல்லாம் மாறி கிடக்கு.இப்ப பழைய போஸ்டெல்லாம் அழிக்கறதா? இல்ல அப்படியே வெச்சுக்கறதா  ஒண்ணும்  புரியல. (இதுக்கு முன்னாடியும் ஒண்ணும் புரியாதுங்கறது வேற விஷயம்.)

 புருஷன் வீட்ல வலது கால வெச்சு உள்ள நுழைஞ்சப்பவும்  சரி ப்ளாக் போட விண்டோ ஓபன் பண்ணினப்பவும் சரி  ஒரே எண்ணம் தான் வந்துச்சு....
"கண்ணை கட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கே....

கல்யாண சமயத்துல வந்த பிசினஸ் ஆர்டர்ஸ முடிச்சுட்டு களம் இறங்கறேன். போஸ்ட் போடாம காஞ்சு கிடக்கறேன். பொறுங்க மக்களே... விரைவில் பொங்கி எழுந்து வரேன். ..
Tuesday, June 19, 2012

கல்யாணம்னா ஒரு பொண்ணுக்கு எப்படி இருக்கும்?

அச்சச்சோ.... என் கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டே நாள் தான் இருக்கு. நலுங்கு வைக்க அத்தை மாமா எல்லாரும் வந்தாச்சு. ஒரு பக்கம் இன்னும் ஷாப்பிங் போய்கிட்டே இருக்கு. என் ஆத்ம நண்பரையே கல்யாணம் பண்ணிக்க போறேன்.  நானும் அவரும் தான் ஒண்ணா சேர்ந்து இன்விடேஷன் குடுக்கறோம், தேவையான திங்க்ஸ் வாங்கிக்கறோம். நாங்க நண்பர்களா சுத்துனதை விட வருங்கால கணவன் மனைவின்னு சுத்தறது ஒரு வித்யாசமான உணர்வை தருது.
                     கல்யாணம்ங்கறது பசங்களுக்கு எப்படியோ. ஆனா பொண்ணுங்களுக்கு கலந்து கட்டி பல உணர்வுகளை  உண்டாக்குது.
* கூடை கூடையா  நாம அன்பு காட்டவும், நம்ம மேல அன்பு காட்டவும், நமக்கே நமக்குன்னு ஒரு ஆள் வரப்போறாங்கன்னு சந்தோஷம் பொங்குது.
* இத்தனை வருஷமா நம்மள அவ்ளோ பத்திரமா பொறுப்பா இளவரசி மாதிரி நம்மள பார்த்துகிட்ட அம்மா அப்பாவை விட்டு இன்னொரு இடத்துக்கு போறோம்னு அழுகையா வருது.
.............
.............
 .............
 .............
 .............
 .............
 .............
 .............
 .............
(ஸீ .... கண்ணுல தண்ணி பொங்குது)
* எந்த பெரிய கவலையும் இல்லாம இஷ்டப்பட்ட மாதிரி வாழ்ந்துட்டு இருந்தோம், இப்ப நிறைய பொறுப்பு வருதேன்னு யோசனையா இருக்கு.
* புகுந்த வீட்டுல அவங்க எல்லாம் என்ன மாதிரி ஆளுங்க, என்ன பேர் எடுக்க போறோம்னு பயமா இருக்கு.
* எனக்கும் அவருக்குமான ரொமான்ஸ் வாழ்க்கைய நினைச்சா படபடப்பா இருக்கு.
* இவ்ளோ நாள் கல்யாணம் ஆகாத பொண்ணுங்கறதால பசங்க சைட் அடிச்சுட்டு இருந்ததை மிஸ் பண்ண போறோமோன்னு கொஞ்சம் கவலையா இருக்கு ;-)   .
* எல்லார் மாதிரியும் எனக்கும் குடித்தனம் பண்ண போற தகுதி வந்தாச்சுன்னு ரொம்ப பெருமையாவும் இருக்கு.

ஒரு நிமிஷம் இருக்கற உணர்வு அடுத்த நிமிஷம் இருக்கறது இல்ல. என் வாழ்க்கையின் அடுத்த கட்டம் எப்படி இருக்க போகுதோ....... தெரியல. ஸோ , இந்த நிமிஷத்தை என்ஜாய் பண்ணிக்க மட்டும் மனசுக்கு கட்டளை போட்டுகிட்டே இருக்கேன்.

Monday, June 11, 2012

எங்க அம்மா அப்பாவுக்கு விடுதலை

அட ஆமாங்க... ஜூன் 21 ம் தேதில இருந்து எங்க அம்மா அப்பா சுதந்திரமா இருக்க போறாங்க. டெய்லி காலைல ஒன்பது மணிக்கு  'எந்திரி எந்திரி' ன்னு கத்திகிட்டு இருக்க தேவை இல்ல. பதினொரு மணிக்கு 'சாப்பிடு சாப்பிடு' ன்னு வெத்தல பாக்கு வச்சு அழைக்க தேவை இல்ல. நேரமா 'தூங்கு தூங்கு'ன்னு டென்ஷனாக தேவை இல்ல. முக்கியமா அவங்களோட ரொம்ப ரொம்ப அழகான பொண்ண (No Bad Words Pls) சைட் அடிக்கற பசங்க கிட்ட இருந்து பாதுகாக்கற டென்ஷன் இல்ல.
ஏன்னு கேக்கறீங்களா?

ஏன்னா எனக்கு கல்யாணம்  :)
 


இவ்ளோ நாள் கல்யாண வேலைய கவனிச்சுகிட்டு (அதாங்க... ஷாப்பிங்) ப்ளாக் போட நேரமே இல்லாம பிசியா இருந்துட்டேன். பத்திரிகை விநியோகம் நடந்துகிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே  இருக்கு. எல்லாரையும் கூப்பிட்டுட்டு நம்ம ப்ளாக் நண்பர்களை கூப்பிடாம விட்டா சரியா? அதனால உங்களை என் கல்யாணத்துக்கு கூப்பிடறேன். வந்துடுங்க . இதோ இன்விடேஷன்.

Tuesday, April 17, 2012

இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு போட்டி

பதிவிட்டு ரொம்ப நாள் ஆனதால நம்ம பக்கத்துக்கு ஆளுங்களை மறுபடி இழுக்கணும் இல்லையா? அதனால ஒரு சின்ன போட்டி.
 


வேலை பளு தெரியாம இருக்க நம்மில் பெரும்பாலானோருக்கு கம்பெனி குடுக்கற  ஒரு(ரே) ஆள் இளைய ராஜா. நமக்கு வயசாகுது, நம்ம ரசனை மாறுதுங்கறதை இந்த ராட்சசனோட பாட்டை ரசிக்க ஆரம்பிக்கறதுலயே தெரிஞ்சுக்கலாம். ஸோ, நான் இங்க சில பாடல்களின் இடையில் வரும் வரிகளை குடுக்கறேன். முதல் வரிகளை கண்டுபிடிங்க. ஓகே?


1. உந்தன் சங்கீத சலங்கை ஒலி
    இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
 
2. உன்னை காணாதிருக்கும் நொடி நேரம்
    பல மாதம் வருடம் என ஆகும்

3. ஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பேரை சொல்லாதோ
    பூவசந்தமே நீ மறந்ததேன்
 
4. நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
    நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்

5. காலை பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ 
    மாலை மயக்கம் நீ பொன்மலரும் நீ என் நினைவும் நீ

6. வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும் 
    கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் 

7. தேடினேன் ஓ என் ஜீவனே 
    தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே

8. தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோஷம்
    உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்

9. கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
      தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ
  
Last But not Least

10. பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே 
      சிறகிரண்டை விரித்துவிட்டேன் இளம் வயது தடுக்கிறதே

அனேகமா ஒண்ணே ஒன்னு தான் கொஞ்சம் கஷ்டம். மீதி எல்லாம் ரொம்ப ஈசியாதான் குடுத்திருக்கேன். try பண்ணுங்க...


 

Wednesday, March 28, 2012

நான் ராமேஸ்வரம் போனேனே... பார்ட் 3 (டைரி பதிவு)

அதிகாலை 4 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை என்று சொல்லி இருந்தார்கள். எங்களுடன் வந்திருந்த அத்தை குடும்பம் எப்போதுமே குளிர், சளி என்று பயப்படுபவர்கள். அவர்களுடன் பயணம் முழுவதும் பல காம்ப்ரமைஸ்கள் செய்து கொள்ள வேண்டி இருக்கும் என்பது தெரியும். எனவே அவ்வளவு அதிகாலை நடக்கும் பூஜையை தரிசிக்க முடியவில்லை.

அவர்கள் பிளான் 8 மணியளவில் கிளம்பலாம் என்பது. நான் அப்போதைக்கு சரி சரி என்று சொல்லி விட்டு அதிகாலை 6 மணிக்கு அவங்க ரூமுக்கு போன் செய்து கிளம்ப தயாராக சொன்னேன். ராமேஸ்வரத்துக்கு பரிகாரத்துக்கு போகும் எல்லோரும் கடலில் குளிக்கவே போவாங்க. ஆனா, இவங்க கடல் தண்ணி infection ஆகிடும் ன்னு லாட்ஜிலேயே வெந்நீரில் குளிச்சுட்டு எங்க கூட கடலுக்கு வந்தாங்க. அந்த அளவு அவங்க ஹைஜீனிக் ;-)

கடல் எப்ப வரும், அலை சத்தம் இன்னும் கேட்கலையே ன்னு ஆர்வத்தோட கடலை நோக்கி போனோம். அந்த குறிப்பிட்ட சந்து திரும்பும் வரை கடல் இருப்பதற்கான அறிகுறியே தெரியல. திடீரென்று தான் கடல் தெரிந்தது. அந்த கடலில் அலை அடிக்காது என்பதால் அமைதியாகவே இருந்தது. நேரில் பார்க்கும்போது ஒரு பெரிய ஏரி அல்லது ஆறு போலதான் இருந்தது.
முன்னோர்களுக்கு சிரார்த்தம் கொடுக்கும் இடம் ஆகையால், பசுக்களும், ஆடுகளும், காகங்களுமாக ஒரே கூட்டம். ஒரே பரிகாரத்துக்கு ஒவ்வொரு ப்ரோகிதரும் ஒவ்வொரு ரேட் வெச்சிருக்காங்க. அனேகமா வாய்ல வந்த அமௌண்ட படிஞ்சா லாபம் ன்னு கேக்கறாங்க. அவங்கள விட்டுட்டு வேறொருத்தரை கேட்டா இவரை விட அவர் குறைஞ்ச ரேட்ட சொல்றாங்க. ஒரு கால் மணி நேரத்துல ரெண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கறது அங்க தான் நடக்குது.
 கச கசன்னு ஒரே ஈரமா கண்ட குப்பையும் கிடந்துச்சு. நாம கொஞ்சம் முகம் சுருக்கினா ஒரு பலகை போட்டு அதுல உக்கார சொல்லி ஸ்ரார்தம், பரிகாரம்  பண்ணறாங்க. அங்க நிகேஷ் எப்படி உக்காந்திருந்தான் தெரியுமா?
பாத்தீங்களா? தீர்த்தம் தெளிச்சா சளி புடிச்சுக்கும்னு அவன எந்த கெட்டப்புல உக்கார வெச்சிருக்காங்கன்னு.... ஹஹஹா...
அவங்க பரிகாரம் செய்யும்போது நாங்க கடல்ல குளிச்சுட்டு வந்தோம். எங்க ஊர்ல கடல் இல்லை. அதனால சந்தோஷமாவும் பயமாவும் நானும் அம்மாவும் குளிச்சோம். தண்ணிக்குள்ள குனிஞ்சு மண்ணெடுத்தா அந்த மண்ல சின்ன சின்னதா நிறைய சங்கு இருந்துச்சு. அந்த மாதிரி மண்ணை நான் பார்த்ததே இல்லை. அப்பறம் கரைக்கு போய் ஸ்ரார்தம் பண்ணிட்டு கோவிலுக்குள்ள போனோம். அங்க நடந்துச்சு பாருங்க அநியாயம்.....
(தொடரும்)Sorry Sorry Sorry

வேலை பளு அதிகமாகி விட்டது நண்பர்களே... Part time Job கிடைத்துள்ளது. பவர்கட் வேறு... தொடர்ந்து பதிவிட எல்லாவிதத்திலும் தடைகள்.  புதிய சூழ்நிலைக்கு பழகிக்கொள்ளும்வரை முன்புபோல அதிக பதிவிட நாளாகும் போலிருக்கிறது. சீக்கிரம் வந்திடறேன்...  

Friday, February 24, 2012

நான் ராமேஸ்வரம் போனேனே... பார்ட் 2 ( டைரி பதிவு)

முந்தைய பதிவு:
 நான் ராமேஸ்வரம் போனேனே... பார்ட் 1 (டைரி பதிவு)

       குடும்பத்தில் இறப்பு ஏற்பட்டதால், எங்கள் ராமேஸ்வர பயணம் தள்ளிப்போனது. அடுத்து மீண்டும் திட்டமிட்டபோது, ஒவ்வொரு குடும்பத்திலும் பரீட்சை வந்துடுச்சு, காலேஜ் ப்ராஜக்ட், கடைக்கு ஆள் வேண்டும் என்று ஒவ்வொரு காரணங்கள். என் அப்பாவோ எங்கள் குடும்பம் மட்டும் தனியாக அவ்வளவு தூரம் போக பயப்பட்டார். அதனால் எங்க பிரேமா அத்தை, முத்துசாமி மாமா, அவங்க பொண்ணு கலை, அவ பையன் நிகேஷ் குட்டியுடன் என் அம்மா, அப்பா மற்றும் நான் மொத்தம் ஏழு பேரும் ஒரு டவேராவில் கிளம்பினோம். பொதுவாக குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு தான் இந்த மாதிரி யாத்திரை போகணும்னு சொல்லுவாங்க. அப்படி போக முடியாதவங்க ஒரு மஞ்சள் துணில காசை முடிஞ்சு வெச்சுட்டு பயணம் கிளம்பலாமாம். நாங்களும் அப்படியே செய்துவிட்டு கிளம்பினோம்.

       ஜன்னல் சீட் உங்களுக்கு எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவு எனக்கு டிரைவரின் பக்கத்து சீட் பிடிக்கும். 180 டிகிரியில் வேடிக்கை பார்க்கலாம். பெரும்பாலும் ஆணாதிக்கம் காரணமாக இந்த இடம் எனக்கு கிடைக்காது. ஆனால் இந்த முறை அதிசயமாக அப்பாவும் சரி, மாமாவும் சரி இந்த இடத்தை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. முழு பயணத்திலும் நானே என்ஜாய் செய்தேன். வண்டி மதியம் 2.45 க்கு ஈரோட்டிலிருந்து கிளம்பியது. எனக்கு வண்டி எந்த ரூட்டில் ராமேஸ்வரம் போகும் என்று துளி ஐடியா கிடையாது. கரூர் வழியாக பயணம் என்பது வண்டியில் போகப்போகத்தான் தெரியும். வழியில் தான் எங்கள் குலதெய்வ கோவில் இருக்கிறது என்பதால் குலதெய்வ கோவில் விசிட்டும் திருப்திகரமாக நடந்தேறியது.

பின்தொடரும் வானம். அருமையான பைபாஸ் சாலை. சிட்டிக்குள் போகாமலேயே 5.45 அளவில் திண்டுக்கல் நோக்கி பயணம். 7 மணிக்கு மதுரை. அங்கு கொஞ்சம் வழி மாறியதால் சுற்றிவிட்டு 8.30 க்கு மானாமதுரை. வழியெங்கும் ஒவ்வொரு ஏரியாவாக கரண்ட் கட். இரவு உணவை ஜெனரேட்டர் வைத்திருந்த ஒரு ஹோட்டலில் முடித்துவிட்டு தொடர் பயணம். 10.40 அளவில் பாம்பன் பாலம். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த லாட்ஜில் இரவு தங்கல். பெரிதாக சலிப்பு ஒன்றும் தெரியவில்லை. Long tour செல்பவர்களுக்கு நல்ல வண்டியும், திறமைசாலி டிரைவரும் வரம்.

அடுத்த பதிவில் ராமேஸ்வரம் கோவில்.
(தொடரும்)


Wednesday, February 22, 2012

ரீசார்ஜ் செய்பவர்களே... உஷார்!

என் கஸின் செல்போன் கடை வைத்திருக்கிறார். எப்போதாவது வெளியூர் செல்லும்போது EC Recharge போனை என்னிடம் கொடுத்து யாராவது ரீசார்ஜ் செய்ய சொன்னால் செய்து விட சொல்லுவார். அப்படித்தான் நேற்றும் போனை என்னிடம் கொடுத்திருந்தார். மதியம் பணம் தீர்ந்து விட்டதால், ஒரு ஆயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிட்டு சென்றிருந்தார்.
 
மாலை எனக்கு ஒரு போன்கால் வந்தது.யாரோ வடஇந்தியர் ஹிந்தி வாசம் வீசும் ஆங்கிலத்தில் பேசினார்.
வ.இ: வணக்கம் மேடம், நாங்க airtel customer care ல இருந்து பேசறோம். நீங்க EC Recharge செய்யறீங்களா?
நான்: ஆமாங்க
வ.இ: உங்க நம்பர் (00000 000000) இது தான?
நான்: ஆமாங்க.
வ.இ:  இப்ப உங்க பேலன்ஸ் எவ்வளவு வெச்சிருக்கீங்க?
நான்:  1080 ரூபாய்னு நினைக்கறேங்க.
வ.இ:  மேடம், நாங்க உங்க சேவைய ஊக்கப்படுத்தறதுக்காக உங்க நம்பருக்கு 3333 ரூபாய் கிப்ட்ரீசார்ஜ் செஞ்சிருக்கோம். அது உங்க அக்கவுண்ட்ல add ஆகிடுச்சான்னு செக் பண்ணிக்கோங்க மேடம். உங்ககிட்ட வேற பர்சனல் நம்பர் இருக்கும்ல. அந்த நம்பர சொல்லுங்க.
நான்: எதுக்கு?
வ.இ: மேடம். நாங்க உங்களுக்கு 3333 ரூபாய் கிப்ட்ரீசார்ஜ் செஞ்சிருக்கோம். எங்க கிட்ட நம்பர் சொல்ல மாட்டீங்களா?
நான்: அதுக்கு? சொல்லனுமா? என்கிட்டே பர்சனல் நம்பர் இல்ல.
வ.இ: அட்லீஸ்ட் landline நம்பராவது சொல்லுங்க.

நான் சொன்னேன். உடனே அந்த நம்பருக்கு கால் செய்து, கன்பார்ம் செய்து கொண்டு மொபைல் லைனை கட் செய்து விட்டான்.  பின் பேலன்ஸ் பார்க்கும் வழிமுறையை சொன்னான். சாதாரண சிம்களில் இருக்கும் service option க்கும், ரீசார்ஜ் சிம்களில் இருக்கும் service option க்கும் வித்தியாசம் உண்டு. நானும் அவன் சொன்ன வழிமுறையில் போய் பார்த்தால் எந்த பணமும் அதிகரித்திருக்கவில்லை.

நான்:  அப்படி எதுவும் add ஆகலையே சார்
வ.இ: ஓகே. பணம் உங்க கணக்குல வரல இல்லையா? பணம் add ஆகணும்னா நான் சொல்ற மாதிரி பண்ணுங்க. கஸ்டமர் நம்பர் ல 99xxx  xxxxx அப்படின்னு டைப் பண்ணுங்க. (அவன் ஒரு போன் நம்பர் சொன்னான்)
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: அமௌன்ட் ல 01000 ன்னு டைப் பண்ணுங்க
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: PIN நம்பர் குடுங்க
நான்:  இருங்க. எனக்கு சந்தேகமா இருக்கு. நான் கஸ்டமர் கேர் ல கேட்டுட்டு இதை பண்ணறேங்க.
வ.இ:  மேடம்... மேடம்... ஒரு நிமிஷம். இப்ப மறுபடியும் ஒருமுறை டைப் பண்ணுங்க. வேணும்னா உங்க நம்பருக்கே பண்ணுங்க. கஸ்டமர் நம்பர் ல xxxxx  xxxxx அப்படின்னு டைப் பண்ணுங்க.
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: அமௌன்ட் ல *1000 ன்னு டைப் பண்ணுங்க (நோட் பண்ணிக்கங்க. இந்த முறை *)
நான்: பண்ணிட்டேன்
வ.இ: பின் நம்பர் குடுங்க
நான்:  குடுத்துட்டேன்
(இப்ப மெசேஜ் வருது. அதுல நீங்க குடுத்த அமௌன்ட் invalid  ன்னு சொல்லிடுச்சு.)
நான்:    Invalid Amount ன்னு வருது சார்
வ.இ:இப்ப மறுபடியும் டைப் பண்ணுங்க. நான் சொல்ற மாதிரி பண்ணுங்க. கஸ்டமர் நம்பர் ல xxxxx  xxxxx அப்படின்னு டைப் பண்ணுங்க. (இந்த முறை அவன் சொன்ன நம்பர்)
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: அமௌன்ட் ல 01000 ன்னு டைப் பண்ணுங்க
(எனக்கு சந்தேகம் போய் விட்டது. கண்டிப்பா இவன் பிராடு தான். அதனால வேணும்னே மறுபடியும் முதல் 0  க்கு பதிலாக * கொடுத்தேன்)
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: PIN நம்பர் குடுங்க
நான்:  குடுத்துட்டேன்
இப்ப மெசேஜ் மறுபடியும்  amount invalid ன்னு  வருது. நான் 0 போட்டிருந்தால் நிச்சயம் அந்த நம்பருக்கு 1000 ரூபாய் போய் இருக்கும். அவனுக்கு குழப்பம். சரியாதான சொன்னோம். ஏன் வரலன்னு குழப்பத்துக்கு போயிட்டான்.  நான் 'வேலை இருக்கு. பணம் வராட்டி பரவாயில்ல. அப்படி இப்படின்னு' நானும் தவிர்த்து பார்த்தேன். மறுபடியும் 2 ,3 முறை இதே மாதிரி பண்ண சொல்லி கெஞ்சினான். நானும் மனதுக்குள் சிரித்துக்கொண்டே ஒவ்வொரு முறையும் 0  க்கு பதிலாக * மட்டுமே கொடுத்தேன். 
(சலித்துப்போன அவன் )
வ.இ: உங்க PIN நம்பரை சொல்லுங்க மேடம்
நான்:  இல்லைங்க. PIN நம்பரை கஸ்டமர் கேர் ல இருந்து கேட்டா கூட சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. 

 இப்படி அவன் விடாக்கண்டனாகவும் நான் கொடாக்கண்டனாகவும் நடந்துகொண்டோம். கடைசியில் இவன் நம்மள விட மாட்டான்னு போனையும் கட் செய்து விட்டு, வயரையும் பிடுங்கி விட்டேன். மொபைலையும் switch off செய்துவிட்டேன்.  


எப்படியோ நம் ரீசார்ஜ் நம்பரை தெரிந்து கொண்டு, கஸ்டமர் கேர் என்று சொல்லி அவர்கள் சொல்லும் instruction ஐ செய்ய வைக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். கவனமாக இருங்கள் நண்பர்களே... சாதாரண ஆட்களிடம் கூட கஸ்டமர் கேரிலிருந்து பேசுகிறேன் என்று சொல்லி அட்ரஸ் முதலிய விஷயங்களை கறக்கும் ஆட்களும் இருக்கிறார்கள். உஷார்...

Tuesday, February 21, 2012

நான் ராமேஸ்வரத்துக்கு போனேனே... பார்ட் 1

ஹப்பாடா... பார்ட் 1 , பார்ட் 2 போட்டு எழுத இன்னுமொரு விஷயம் கிடைச்சுடுச்சு. ஆமாங்க... இந்த முறை நான் ராமேஸ்வரம் போயிட்டு வந்தத பத்தி பகிர்ந்துக்க போறேன். நான் ஒழுக்கமா ஒரு பதிவுல முடிச்சுடலாம்னு தான் நினைச்சேன். ஆனா திருச்சி போன பதிவுக்கு செம வரவேற்பு (?!) இருந்துச்சா... அதான் இதையும் தொடரும் போட்டு எழுதலாம்னு முடிவெடுத்துட்டேன்.

அதாகப்பட்டது என்னன்னா... இந்த ராமேஸ்வரம் ட்ரிப் இருக்கே... இது ஒரு பத்து பதினஞ்சு வருஷமா போகணும் போகணும்னு பிளான் போட்ட ட்ரிப். ஜோசியர்கள் 'முன்னோர்கள் வழில தோஷம், சாபம்  இருக்கு. அதுக்கு நீங்க ராமேஸ்வரமும் தேவிபட்டினமும் போயிட்டு வாங்க' ன்னு சொல்லி இருந்தாங்க. இருக்காங்க. அதுக்கு ஏத்த மாதிரி எங்க குடும்பத்துல கல்யாணமான பொண்ணுங்க அஞ்சு வருஷம் புருஷன் வீட்ல இருந்துட்டு, குழந்தை பிறந்து ஒரு வருஷத்துல அம்மா வீட்டுக்கு வந்துடறாங்க. இதுக்கு பயந்துகிட்டே நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். அப்பறம் தோஷத்தை கண்டுபிடிச்சவங்க பரிகாரத்தையும் கண்டுபிடிச்சிருக்காங்களே... அதனால போயிட்டு வந்தா நல்லது நடக்கும்னு எனக்கும் நம்பிக்கை வந்தது.

நான் பலமுறை போக முயற்சித்தும் அது நடக்கவே இல்லை. எல்லாம் சாதாரண காரணங்களுக்காக. ராமேஸ்வரம் போகாம என் கல்யாண பேச்சே எடுக்காதீங்கன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். 

கடைசியா ஒரு மாசத்துக்கு முன்னாடி குடும்ப உறுப்பினர்கள் 22 பேரையும் சேர்த்து ஒண்ணா போகலாம்னு பிளான் பண்ணினோம். முதல்ல சாக்கு போக்கு சொன்னவங்க, எனக்காகவே சரின்னு சொன்னாங்க.

 பேச்சு வார்த்தை இருக்கறவங்க, சண்டை போட்டவங்க, Egoist எல்லாரும் மத்த பிரச்சனைய எல்லாம் ஒத்தி வெச்சுட்டு கோயிலுக்கு போறதுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. வண்டி ரெடி... டூர் போக நாள் குறிச்சாச்சு... வழில சாப்பிட என்ன சமைக்கறது, யார் சமைக்கறது, எல்லாம் fix பண்ணியாச்சு...
 
அடுத்த நாள் மதியம் கிளம்பலாம்னு இருக்கறப்ப TV ல பிளாஷ் நியூஸ். திண்டுக்கல் ல பசுபதி பாண்டியன் ன்னு முக்கியமான ஒருத்தரை வெட்டிட்டாங்க. தென் மாவட்டங்களில் கலவரம்ன்னு. வீட்ல இருக்கறவங்க எல்லாம் அப்படியே டூரை கேன்சல் பண்ணிட்டாங்க.
 
எப்பவுமே புண்ணிய ஷேத்திரங்கள் போகும்போது இப்படித்தான் தடைகள் வருமாம். ஏன்னா, நாம போக நினைச்சதும் போக முடியாது. அந்த இடத்துல இருக்கற தெய்வம் ஓகே இவங்க வரட்டும்னு நினைக்கணுமாம். அதனால 'நீ ஏன் நான் வரணும்னு நினைக்க மாட்டேங்கற? ஏன் இப்படி தடுத்துகிட்டே இருக்கற?ன்னு சாமிகிட்ட சண்டையான சண்டை போட்டேன். அதுக்கப்பறம் தான் தெரிஞ்சுது கடவுள் ஒவ்வொரு காரியத்தையும் ஒவ்வொரு காரணத்தோடு தான் நடத்தறார்னு .

ஆமாம். நாங்க கிளம்ப நினைச்சா அதே நாள்ல  தான் என் தாய்மாமா இறந்து போனார்.

(தொடரும்)