Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, February 24, 2012

நான் ராமேஸ்வரம் போனேனே... பார்ட் 2 ( டைரி பதிவு)

முந்தைய பதிவு:
 நான் ராமேஸ்வரம் போனேனே... பார்ட் 1 (டைரி பதிவு)

       குடும்பத்தில் இறப்பு ஏற்பட்டதால், எங்கள் ராமேஸ்வர பயணம் தள்ளிப்போனது. அடுத்து மீண்டும் திட்டமிட்டபோது, ஒவ்வொரு குடும்பத்திலும் பரீட்சை வந்துடுச்சு, காலேஜ் ப்ராஜக்ட், கடைக்கு ஆள் வேண்டும் என்று ஒவ்வொரு காரணங்கள். என் அப்பாவோ எங்கள் குடும்பம் மட்டும் தனியாக அவ்வளவு தூரம் போக பயப்பட்டார். அதனால் எங்க பிரேமா அத்தை, முத்துசாமி மாமா, அவங்க பொண்ணு கலை, அவ பையன் நிகேஷ் குட்டியுடன் என் அம்மா, அப்பா மற்றும் நான் மொத்தம் ஏழு பேரும் ஒரு டவேராவில் கிளம்பினோம். பொதுவாக குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு தான் இந்த மாதிரி யாத்திரை போகணும்னு சொல்லுவாங்க. அப்படி போக முடியாதவங்க ஒரு மஞ்சள் துணில காசை முடிஞ்சு வெச்சுட்டு பயணம் கிளம்பலாமாம். நாங்களும் அப்படியே செய்துவிட்டு கிளம்பினோம்.

       ஜன்னல் சீட் உங்களுக்கு எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவு எனக்கு டிரைவரின் பக்கத்து சீட் பிடிக்கும். 180 டிகிரியில் வேடிக்கை பார்க்கலாம். பெரும்பாலும் ஆணாதிக்கம் காரணமாக இந்த இடம் எனக்கு கிடைக்காது. ஆனால் இந்த முறை அதிசயமாக அப்பாவும் சரி, மாமாவும் சரி இந்த இடத்தை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. முழு பயணத்திலும் நானே என்ஜாய் செய்தேன். வண்டி மதியம் 2.45 க்கு ஈரோட்டிலிருந்து கிளம்பியது. எனக்கு வண்டி எந்த ரூட்டில் ராமேஸ்வரம் போகும் என்று துளி ஐடியா கிடையாது. கரூர் வழியாக பயணம் என்பது வண்டியில் போகப்போகத்தான் தெரியும். வழியில் தான் எங்கள் குலதெய்வ கோவில் இருக்கிறது என்பதால் குலதெய்வ கோவில் விசிட்டும் திருப்திகரமாக நடந்தேறியது.

பின்தொடரும் வானம். அருமையான பைபாஸ் சாலை. சிட்டிக்குள் போகாமலேயே 5.45 அளவில் திண்டுக்கல் நோக்கி பயணம். 7 மணிக்கு மதுரை. அங்கு கொஞ்சம் வழி மாறியதால் சுற்றிவிட்டு 8.30 க்கு மானாமதுரை. வழியெங்கும் ஒவ்வொரு ஏரியாவாக கரண்ட் கட். இரவு உணவை ஜெனரேட்டர் வைத்திருந்த ஒரு ஹோட்டலில் முடித்துவிட்டு தொடர் பயணம். 10.40 அளவில் பாம்பன் பாலம். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த லாட்ஜில் இரவு தங்கல். பெரிதாக சலிப்பு ஒன்றும் தெரியவில்லை. Long tour செல்பவர்களுக்கு நல்ல வண்டியும், திறமைசாலி டிரைவரும் வரம்.

அடுத்த பதிவில் ராமேஸ்வரம் கோவில்.
(தொடரும்)


Wednesday, February 22, 2012

ரீசார்ஜ் செய்பவர்களே... உஷார்!

என் கஸின் செல்போன் கடை வைத்திருக்கிறார். எப்போதாவது வெளியூர் செல்லும்போது EC Recharge போனை என்னிடம் கொடுத்து யாராவது ரீசார்ஜ் செய்ய சொன்னால் செய்து விட சொல்லுவார். அப்படித்தான் நேற்றும் போனை என்னிடம் கொடுத்திருந்தார். மதியம் பணம் தீர்ந்து விட்டதால், ஒரு ஆயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிட்டு சென்றிருந்தார்.
 
மாலை எனக்கு ஒரு போன்கால் வந்தது.யாரோ வடஇந்தியர் ஹிந்தி வாசம் வீசும் ஆங்கிலத்தில் பேசினார்.
வ.இ: வணக்கம் மேடம், நாங்க airtel customer care ல இருந்து பேசறோம். நீங்க EC Recharge செய்யறீங்களா?
நான்: ஆமாங்க
வ.இ: உங்க நம்பர் (00000 000000) இது தான?
நான்: ஆமாங்க.
வ.இ:  இப்ப உங்க பேலன்ஸ் எவ்வளவு வெச்சிருக்கீங்க?
நான்:  1080 ரூபாய்னு நினைக்கறேங்க.
வ.இ:  மேடம், நாங்க உங்க சேவைய ஊக்கப்படுத்தறதுக்காக உங்க நம்பருக்கு 3333 ரூபாய் கிப்ட்ரீசார்ஜ் செஞ்சிருக்கோம். அது உங்க அக்கவுண்ட்ல add ஆகிடுச்சான்னு செக் பண்ணிக்கோங்க மேடம். உங்ககிட்ட வேற பர்சனல் நம்பர் இருக்கும்ல. அந்த நம்பர சொல்லுங்க.
நான்: எதுக்கு?
வ.இ: மேடம். நாங்க உங்களுக்கு 3333 ரூபாய் கிப்ட்ரீசார்ஜ் செஞ்சிருக்கோம். எங்க கிட்ட நம்பர் சொல்ல மாட்டீங்களா?
நான்: அதுக்கு? சொல்லனுமா? என்கிட்டே பர்சனல் நம்பர் இல்ல.
வ.இ: அட்லீஸ்ட் landline நம்பராவது சொல்லுங்க.

நான் சொன்னேன். உடனே அந்த நம்பருக்கு கால் செய்து, கன்பார்ம் செய்து கொண்டு மொபைல் லைனை கட் செய்து விட்டான்.  பின் பேலன்ஸ் பார்க்கும் வழிமுறையை சொன்னான். சாதாரண சிம்களில் இருக்கும் service option க்கும், ரீசார்ஜ் சிம்களில் இருக்கும் service option க்கும் வித்தியாசம் உண்டு. நானும் அவன் சொன்ன வழிமுறையில் போய் பார்த்தால் எந்த பணமும் அதிகரித்திருக்கவில்லை.

நான்:  அப்படி எதுவும் add ஆகலையே சார்
வ.இ: ஓகே. பணம் உங்க கணக்குல வரல இல்லையா? பணம் add ஆகணும்னா நான் சொல்ற மாதிரி பண்ணுங்க. கஸ்டமர் நம்பர் ல 99xxx  xxxxx அப்படின்னு டைப் பண்ணுங்க. (அவன் ஒரு போன் நம்பர் சொன்னான்)
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: அமௌன்ட் ல 01000 ன்னு டைப் பண்ணுங்க
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: PIN நம்பர் குடுங்க
நான்:  இருங்க. எனக்கு சந்தேகமா இருக்கு. நான் கஸ்டமர் கேர் ல கேட்டுட்டு இதை பண்ணறேங்க.
வ.இ:  மேடம்... மேடம்... ஒரு நிமிஷம். இப்ப மறுபடியும் ஒருமுறை டைப் பண்ணுங்க. வேணும்னா உங்க நம்பருக்கே பண்ணுங்க. கஸ்டமர் நம்பர் ல xxxxx  xxxxx அப்படின்னு டைப் பண்ணுங்க.
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: அமௌன்ட் ல *1000 ன்னு டைப் பண்ணுங்க (நோட் பண்ணிக்கங்க. இந்த முறை *)
நான்: பண்ணிட்டேன்
வ.இ: பின் நம்பர் குடுங்க
நான்:  குடுத்துட்டேன்
(இப்ப மெசேஜ் வருது. அதுல நீங்க குடுத்த அமௌன்ட் invalid  ன்னு சொல்லிடுச்சு.)
நான்:    Invalid Amount ன்னு வருது சார்
வ.இ:இப்ப மறுபடியும் டைப் பண்ணுங்க. நான் சொல்ற மாதிரி பண்ணுங்க. கஸ்டமர் நம்பர் ல xxxxx  xxxxx அப்படின்னு டைப் பண்ணுங்க. (இந்த முறை அவன் சொன்ன நம்பர்)
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: அமௌன்ட் ல 01000 ன்னு டைப் பண்ணுங்க
(எனக்கு சந்தேகம் போய் விட்டது. கண்டிப்பா இவன் பிராடு தான். அதனால வேணும்னே மறுபடியும் முதல் 0  க்கு பதிலாக * கொடுத்தேன்)
நான்:  பண்ணிட்டேன்
வ.இ: PIN நம்பர் குடுங்க
நான்:  குடுத்துட்டேன்
இப்ப மெசேஜ் மறுபடியும்  amount invalid ன்னு  வருது. நான் 0 போட்டிருந்தால் நிச்சயம் அந்த நம்பருக்கு 1000 ரூபாய் போய் இருக்கும். அவனுக்கு குழப்பம். சரியாதான சொன்னோம். ஏன் வரலன்னு குழப்பத்துக்கு போயிட்டான்.  நான் 'வேலை இருக்கு. பணம் வராட்டி பரவாயில்ல. அப்படி இப்படின்னு' நானும் தவிர்த்து பார்த்தேன். மறுபடியும் 2 ,3 முறை இதே மாதிரி பண்ண சொல்லி கெஞ்சினான். நானும் மனதுக்குள் சிரித்துக்கொண்டே ஒவ்வொரு முறையும் 0  க்கு பதிலாக * மட்டுமே கொடுத்தேன். 
(சலித்துப்போன அவன் )
வ.இ: உங்க PIN நம்பரை சொல்லுங்க மேடம்
நான்:  இல்லைங்க. PIN நம்பரை கஸ்டமர் கேர் ல இருந்து கேட்டா கூட சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. 

 இப்படி அவன் விடாக்கண்டனாகவும் நான் கொடாக்கண்டனாகவும் நடந்துகொண்டோம். கடைசியில் இவன் நம்மள விட மாட்டான்னு போனையும் கட் செய்து விட்டு, வயரையும் பிடுங்கி விட்டேன். மொபைலையும் switch off செய்துவிட்டேன்.  


எப்படியோ நம் ரீசார்ஜ் நம்பரை தெரிந்து கொண்டு, கஸ்டமர் கேர் என்று சொல்லி அவர்கள் சொல்லும் instruction ஐ செய்ய வைக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். கவனமாக இருங்கள் நண்பர்களே... சாதாரண ஆட்களிடம் கூட கஸ்டமர் கேரிலிருந்து பேசுகிறேன் என்று சொல்லி அட்ரஸ் முதலிய விஷயங்களை கறக்கும் ஆட்களும் இருக்கிறார்கள். உஷார்...

Tuesday, February 21, 2012

நான் ராமேஸ்வரத்துக்கு போனேனே... பார்ட் 1

ஹப்பாடா... பார்ட் 1 , பார்ட் 2 போட்டு எழுத இன்னுமொரு விஷயம் கிடைச்சுடுச்சு. ஆமாங்க... இந்த முறை நான் ராமேஸ்வரம் போயிட்டு வந்தத பத்தி பகிர்ந்துக்க போறேன். நான் ஒழுக்கமா ஒரு பதிவுல முடிச்சுடலாம்னு தான் நினைச்சேன். ஆனா திருச்சி போன பதிவுக்கு செம வரவேற்பு (?!) இருந்துச்சா... அதான் இதையும் தொடரும் போட்டு எழுதலாம்னு முடிவெடுத்துட்டேன்.

அதாகப்பட்டது என்னன்னா... இந்த ராமேஸ்வரம் ட்ரிப் இருக்கே... இது ஒரு பத்து பதினஞ்சு வருஷமா போகணும் போகணும்னு பிளான் போட்ட ட்ரிப். ஜோசியர்கள் 'முன்னோர்கள் வழில தோஷம், சாபம்  இருக்கு. அதுக்கு நீங்க ராமேஸ்வரமும் தேவிபட்டினமும் போயிட்டு வாங்க' ன்னு சொல்லி இருந்தாங்க. இருக்காங்க. அதுக்கு ஏத்த மாதிரி எங்க குடும்பத்துல கல்யாணமான பொண்ணுங்க அஞ்சு வருஷம் புருஷன் வீட்ல இருந்துட்டு, குழந்தை பிறந்து ஒரு வருஷத்துல அம்மா வீட்டுக்கு வந்துடறாங்க. இதுக்கு பயந்துகிட்டே நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். அப்பறம் தோஷத்தை கண்டுபிடிச்சவங்க பரிகாரத்தையும் கண்டுபிடிச்சிருக்காங்களே... அதனால போயிட்டு வந்தா நல்லது நடக்கும்னு எனக்கும் நம்பிக்கை வந்தது.

நான் பலமுறை போக முயற்சித்தும் அது நடக்கவே இல்லை. எல்லாம் சாதாரண காரணங்களுக்காக. ராமேஸ்வரம் போகாம என் கல்யாண பேச்சே எடுக்காதீங்கன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். 

கடைசியா ஒரு மாசத்துக்கு முன்னாடி குடும்ப உறுப்பினர்கள் 22 பேரையும் சேர்த்து ஒண்ணா போகலாம்னு பிளான் பண்ணினோம். முதல்ல சாக்கு போக்கு சொன்னவங்க, எனக்காகவே சரின்னு சொன்னாங்க.

 பேச்சு வார்த்தை இருக்கறவங்க, சண்டை போட்டவங்க, Egoist எல்லாரும் மத்த பிரச்சனைய எல்லாம் ஒத்தி வெச்சுட்டு கோயிலுக்கு போறதுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. வண்டி ரெடி... டூர் போக நாள் குறிச்சாச்சு... வழில சாப்பிட என்ன சமைக்கறது, யார் சமைக்கறது, எல்லாம் fix பண்ணியாச்சு...
 
அடுத்த நாள் மதியம் கிளம்பலாம்னு இருக்கறப்ப TV ல பிளாஷ் நியூஸ். திண்டுக்கல் ல பசுபதி பாண்டியன் ன்னு முக்கியமான ஒருத்தரை வெட்டிட்டாங்க. தென் மாவட்டங்களில் கலவரம்ன்னு. வீட்ல இருக்கறவங்க எல்லாம் அப்படியே டூரை கேன்சல் பண்ணிட்டாங்க.
 
எப்பவுமே புண்ணிய ஷேத்திரங்கள் போகும்போது இப்படித்தான் தடைகள் வருமாம். ஏன்னா, நாம போக நினைச்சதும் போக முடியாது. அந்த இடத்துல இருக்கற தெய்வம் ஓகே இவங்க வரட்டும்னு நினைக்கணுமாம். அதனால 'நீ ஏன் நான் வரணும்னு நினைக்க மாட்டேங்கற? ஏன் இப்படி தடுத்துகிட்டே இருக்கற?ன்னு சாமிகிட்ட சண்டையான சண்டை போட்டேன். அதுக்கப்பறம் தான் தெரிஞ்சுது கடவுள் ஒவ்வொரு காரியத்தையும் ஒவ்வொரு காரணத்தோடு தான் நடத்தறார்னு .

ஆமாம். நாங்க கிளம்ப நினைச்சா அதே நாள்ல  தான் என் தாய்மாமா இறந்து போனார்.

(தொடரும்)