கொஞ்சம் Work busy. அதனால சரியான இடைவெளியில் பதிவிட முடியவில்லை.மன்னிக்கவும். இரண்டு வாரங்களுக்கும் மேலானதால் குறிப்பிட நினைத்த சில இடங்களின் பெயர்கள் கொஞ்சம் மறந்துவிட்டது. இன்னும் தாமதித்தால் பார்ட் 3 போட முடியாது என்பதாலும், இதை நம்பி சேர்ந்த ஐந்து பாலோயர்கள் ஏமாந்து போவார்கள் என்பதாலும் அவசர அவசரமாக இந்த பதிவு. Let's continue.
அரங்கனின் வெளிபிரகாரத்தில் நாயக்க மன்னனின் ஓவியமும் சிறு விவரமும் காணப்பட்டது. ஒருமுறை மன்னன் வருவதற்குள்ளாக இறைவனுக்கு செய்யவேண்டிய பூஜை முடிந்து விட்டதாகவும், மன்னன் மீண்டும் பூஜை செய்ய சொன்ன போது 'ஒரு வருடம் கழித்துதான் செய்வோம். இடையில் செய்ய மாட்டோம். அதுவரை காத்திருங்கள்' என்று அர்ச்சகர்கள் சொல்லிவிட (ஹ்ம்ம்ம் .... அந்த காலத்துல எப்படி தைரியமா இருந்திருக்காங்க.), 'அந்த பூஜையை பார்க்கும் வரை நான் அரண்மனை செல்ல மாட்டேன் இங்கேயே தங்கி அரசாங்க அலுவலை கவனிப்பேன்' என்று மன்னனும் அந்த மண்டபத்தையே தன் ஆபிஸ் ஆக்கிக்கொண்டு ஒருவருடம் கழித்து குறிப்பிட்ட பூஜையை கண்ட பின் இடத்தை காலி செய்திருக்கிறான். அர்ச்சகர்கள், மன்னன் இருவரின் ஈகோ யுத்தத்தில் அரங்கனின் அமைதி கெட்டிருக்குமோ இல்லையோ மக்கள் நிம்மதியாக சாமி கும்பிட்டிருக்க முடியாது என்று தோன்றியது.
அங்கிருந்து வெளியே வந்து தாயாரை தரிசிக்கலாம் என்று செல்லும்போது, மதியம் மணி ஒண்ணேகால். நடை சார்த்தப் போவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. வேக வேகமாக சென்றாலும், தாயார் சந்நிதியின் நடை சார்த்தப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அடடா.. இவ்வளவு தூரம் வந்து ரங்கநாயகியை காண முடியவில்லையே என்று ஏமாற்றமாக இருந்தது. சரி அப்படியே வெளியில் இருந்தே எல்லாரையும் கும்பிட்டு விட்டு ஊரை பார்த்து போகலாம் என்று திரும்பினால், 'இப்ப வீட்டுக்கு போய் என்ன பண்ண போறோம்? உக்காரு . 3 மணிக்கு நடை திறந்துடுவாங்களாம். பார்த்துட்டு போகலாம்' என்று என் அம்மா அங்கேயே படுத்துக்கொண்டார். என் life time ல நான் இப்படி கோவில்ல எல்லாம் படுத்ததே இல்ல. அம்மா,... எழுந்திரும்மா... மானத்த வாங்காத ன்னு கெஞ்சி கூத்தாடியும் ஒரு பிரயோஜனமும் இல்ல. கூட்டமும் குறைவாக இருந்தது. காலை மூணரை மணிக்கு எழுந்த அலுப்பும் சோர்வும் கண்ணை இழுத்தது. வேறு வழி இன்றி நானும்...... (எல்லாரும் தெரிஞ்சுகோங்க. ஸ்ரீ ரங்கத்தில் மதியம் 1 -3 கோவில் நடை சார்த்திடுவாங்க. அதுக்கு ஏத்த மாதிரி உங்கள் டூர் பிளான் இருக்கட்டும்)
செம தூக்கம். ரெண்டு ஐம்பதுக்கு எழுந்து பக்கத்தில் இருந்த பைப்பில் முகம், கை கால் கழுவி refresh செய்து கொண்டு ரங்கநாயகியை தரிசிக்க தயாரானோம். ரங்கனின் அழகுக்கு கொஞ்சமும் குறைவில்லை அவர் நாயகி. திருப்தியுடன் தரிசித்து வெளியே வர, 5, 6 கிளிகள் கீச்சிட்டுகொண்டு பறந்தன. இறை சந்நிதியில் கிளி காண்பது நல்ல சகுனம் ஆகையால் இன்னும் பரம திருப்தி கிட்டியது. தல விருட்சம் இருக்கும் இடத்தில் ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்தரம் என்று நினைக்கிறேன்.( தவறாக இருந்தால் மன்னிக்கவும்.) சமஸ்க்ருத மந்திரத்தை தமிழில் கல்வெட்டாக எழுதி இருக்கிறார்கள். அதை படித்தால் நம் பொருளாதார கஷ்டங்கள் நீங்கும் என்பதால் ஒரு சராசரி பக்தையாக அதை படித்து விட்டு வந்தேன்.( Hey... It really works...பதிவு போட முடியாத அளவு பிஸி ஆகிட்டேன்ல ) படிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். ஹிந்தி தெரிந்தால் படிப்பது கொஞ்சம் எளிது.
அங்கிருந்து வெளியே வந்தால் கண்ணன் உரலில் கட்டப்பட்டுள்ள சந்நிதியின் எதிரே, தரையில் வரிசையாக மூன்று குழிகளும், நடு குழியின் மேலே ஒன்று, கீழே ஒன்றுமாக கிட்டத்தட்ட (not exactly) நட்சத்திரம் போல ஐந்து குழிகள் இருந்தன. அதன் பக்கத்தில் கால் வைத்து நிற்க ஒரு சதுர தகடு. அவ்வழியே சென்ற ஐயரிடம் விசாரித்த போது, 'சொர்க்க வாசல் திறப்பு அன்று அந்த தகட்டில் நின்று, இடது கையை முதுகின் பின் வைத்துக்கொண்டு, காலை மடக்காமல் குனிந்து, மோதிர விரலை நடு குழியிலும், சுண்டு விரலை வலது பக்க குழியிலும், ஆள்காட்டி விரலை இடது பக்க குழியிலும், நடு விரலை மேல் குழியிலும், பெருவிரலை கீழ் குழியிலும் பொருத்தி வலது பக்கம் ஒருமுறை, இடது பக்கம் ஒருமுறை பார்த்துவிட்டு பின் நேரே நோக்கினால், சொர்க்க வாசல் தெரியும். அதை வழிபட்டுக்கொள்ள வேண்டும்' என்றார். வித்யாசமாக இருந்தது.
அங்கிருந்து வெளியே வந்தால், கோவில் தெப்பக்குளம். பசுமையாக இருந்தது. 'வாவ்' என்றேன். 'இவ்ளோ பாசி படர்ந்திருக்கு, என்ன வாவ் வேண்டி கிடக்குது' என்றார் அம்மா. எனக்கென்னவோ கோதண்டராமன் சந்நிதியில் இருந்து பார்க்கும்போது அந்த பச்சை நீரும், நீல வானமும் கலந்த காட்சி அவ்வளவு அழகாக தோன்றியது. மனசுக்குள்ள அந்த குளுமை வந்து ஒட்டிகிச்சு. அங்கே என்னால் பார்க்கமுடியாதது ஆண்டாளின் திருக்கோலத்தை. நாலாபக்கமும் ஒவ்வொரு முகம் தெரியும் என்று போர்டில் எழுதி இருந்தது. ஆனால், சன்னதி திறக்கப்படவே இல்லை. So sad!
அதன் பின் ஆயிரம்கால் மண்டபமும், அற்புதமான சிற்பவேலை செய்யப்பட்ட மண்டபமும். நுண்ணிய வேலைப்பாடுகள். ரசித்துப் பார்த்தால் அதி அற்புதம் .
அங்கிருந்து நேரே ராமானுஜர் சந்நிதிக்கு பாதை அழைத்துச்சென்றது. நம்பமாட்டீர்கள். ராமானுஜரின் ஒரிஜினல் உடல் அங்கே அமர்ந்த நிலையில் கிட்டத்தட்ட 800 ஆண்டுகளை கடந்தும் உள்ளது. தன் வாழ்நாள் முடிந்த பின் சமாதிநிலை அடைந்த ராமானுஜரின் உடல் குறிப்பிட்ட காலத்திற்கு பின் மண்ணில் இருந்து மேலே வந்து விட்டது. அன்றிலிருந்து இன்று வரை தண்ணொளி குன்றாமல் உடையார் காட்சி தருகிறார். பச்சை கற்பூரம், குங்குமப்பூ இன்னும் சிலவற்றை கலந்து அவரது உடலை பதப்படுத்தி வைத்துள்ளனர். நகம் கூட ஒரிஜினல். அர்ச்சகர் ஒவ்வொருமுறையும் முழு விவரத்தையும் கூறி தீபாராதனை காட்டுகிறார்.
அங்கிருந்து வெளியே வர, அருங்காட்சியகம் தென்பட்டது. உள்ளே சுற்றி பார்க்க ஐந்து ரூபாய் கட்டணம். என் வாழ்நாளில் நான் முதல் முறையாக வாட்கள், (சினிமாவில் மட்டுமே பார்த்த) கவசங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், பெரிய பெரிய தந்தங்கள், என பல விஷயங்கள் இருந்தன. பழங்கால பொருட்களுடன் எதற்கு தற்கால பாசி, செயின்களை வைத்துள்ளனர் என்று தெரியவில்லை. அங்கே என்னை குழப்பிய ஒரு விஷயம், ஆணும் பெண்ணும் கட்டியனைத்த நிலையில் தந்த வேலைப்பாடால் ஆனா பல பொருட்கள் உள்ளன. அந்த ஆணும் பெண்ணும் யார்னு கேட்டா, நாயக்க மன்னனும் அவன் மனைவிகளுமாம். ஒரு ராஜா, தான் தன் மனைவியுடன் இருக்கும் ஏகாந்த நிலையை எதற்கு இப்படி வெளிப்படையாக exhibit செய்தார் என்று புரியல.
அதன் பின் சக்கரத்தாழ்வார் சந்நிதி சென்று அவரையும், அவருக்கு நேர் பின்னால் உள்ள யோகநரசிம்மரையும் கும்பிட்டோம். அங்கிருந்து வெளியே வந்து மற்ற சந்நிதிகளையும் தரிசித்து கோவிலை விட்டு திருப்தியாக வெளியே வந்தோம். இந்த கோவிலில் தரிசனம் தவிர்த்த நிறை என்று சொன்னால், நாம் என்ன சந்தேகம் கேட்டாலும் அர்ச்சகர்கள் அதை முகம் சுளிக்காமல் விளக்குவது. குறை என்று சொன்னால், அவர்கள் எல்லோரிடமும் காசு கேட்பது. நாம் கொடுக்க விரும்பினால் கொடுக்கலாம். நம் இஷ்டம் தான் என்றாலும் எல்லோரும் கேட்பதால் நச்சரிப்பதாக தோன்றி விடுகிறது. மற்றபடிபெரிதாக ஒன்றும் குற்றமில்லை.
கோவிலின் வெளியே எப்போதும் போல பத்து ரூபாய் பாசியை நூறு ரூபாய் என்று சொல்லி ஒரு வெளிநாட்டு பெண்மணியை ஏமாற்றி ஐந்து பாசியை கொடுத்து ஐநூறு ரூபாய்கள் சம்பாதித்திருந்தனர் நம் மக்கள். 'இலவச' செருப்பு விடும் இடத்தில் ரெண்டு ரூபாய் கொடுத்து எங்கள் செருப்பை போட்டுக்கொண்டு நாங்களும் வாலண்டீராக ஏமாந்து வெளியே வந்தோம்.