ஹா...... கிட்ட தட்ட அஞ்சு மாசம் ஆச்சு பதிவெழுதி... இப்ப இந்த பதிவை டைப் பண்ணும்போது தான் மனசு ரிலாக்ஸ் ஆகுது. இந்த சுகம் எங்க அம்மா வீட்டுக்கு போறதுல இருக்கற சுகத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாம இருக்கு. என் முகத்துல தானா ஒரு சின்ன புன்னகை வந்து உக்காந்துகிச்சு. Miss You all! :)
இந்த முறை நான் ஒரு குடும்ப இஸ்திரி ன்னு நிரூபிக்க Home Management சம்பந்தமா சில டிப்ஸ். அனேகமா உங்களுக்கும் உபயோகமா இருக்கும்னு நம்பறேன். இதோ கலந்து கட்டின டிப்ஸ் :
- மண்ணுக்கு அடியில் முளைக்கும் எந்த ஒரு காய்கறியும் கட்டாயம் தோல் நீக்கப்படவேண்டியவை. ஏனெனில் காய்கறிகளின் இண்டு இடுக்கில் கண்ணுக்கு தெரியாத, வேக வைத்தாலும் போகாத கிருமிகள் உண்டு. எனவே மேலோட்டமாக சுரண்டினால் போதாது, தோல் தெரியாத அளவு சுரண்டப்பட வேண்டும்.
- பால் குக்கரில் பாலை காய்ச்சினால் சீரான விசில் சத்தம் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடலாம். சில வீடுகளில் நன்கு விசில் வரட்டும், அப்போ தான் பால் நல்லா காயும் என்ற மூட நம்பிக்கையில் இருப்பார்கள். நல்லா காய்ந்தது நமக்கு தெரியட்டும் என்று தான் விசில் சப்தத்தை வைத்திருக்கிறார்கள். எனவே தேவை இல்லாமல் காஸ் வேஸ்ட் செய்ய தேவையில்லை
- சோப்பு பவுடரில் ஊற வைத்து துணி துவைக்கும் போது ஊற வைத்த துணியை உடனே துவைப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஊறவைத்த அரைமணி நேரத்திற்கு பின்பே துவைக்க வேண்டும். அப்போது தான் சோப்பு பவுடர் துணியில் உள்ள அழுக்குகளை எடுத்திருக்கும். அப்படினா, நாள் முழுக்க ஊற வைச்சா இன்னும் நிறைய அழுக்கு வரும் என்று நினைத்து விடாதீர்கள். ஊற வைத்த இரண்டரை மணி நேரத்தில் துவைத்து விட வேண்டும். இல்லாவிட்டால் துணியில் இருந்து வெளியேறிய அழுக்கை துணி மீண்டும் உறிஞ்சிக்கொள்ளும்.
- 'தேவைப்படும்' 'இது ஒரு ஞாபகத்துக்காக' என்று பல பொருட்களை சேர்த்து சேர்த்து வைப்பவரா?அடுத்த முறை சுத்தம் செய்யும்போது இந்த கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். இந்த பொருளை இத்தனை வருடங்களில் எத்தனை முறை உபயோகித்திருக்கிறோம் ? (அல்லது) இந்த பொருள் இருந்தால் தான் குறிப்பிட்ட சம்பவமோ ஆளோ நினைவுக்கு வருவாரா? இது போல் அவர் நம் சம்பந்தப்பட்ட பொருளை வைத்துக்கொண்டிருக்கிறாரா? இந்த கேள்விகளுக்கு பதில் வரும்போது வேண்டாத பொருட்கள் தானாக குப்பை தொட்டிக்கு போய் விடும்.
- நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால் இந்த குறிப்பு உபயோகப்படும். சில துணிகள் பார்க்க நன்றாக இல்லை என்று நீங்களாக நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், வேறொருவரின் 'டேஸ்டு' க்கு அது நன்றாகவே இருக்கும். அதனால் எல்லா ஆடைகளுக்கும் ரசிகர்கள் உண்டு. 'இதை அணிய வேண்டாம்' என்று நீங்கள் பீரோவின் அடியில் வைத்த ஆடைகள் அணியப்படாமலே இருக்கும் உங்கள் பீரோவில் உள்ள உங்கள் துணிகளை மாதம் ஒருமுறை தலைகீழாக மாற்றி வையுங்கள். அப்போது தான் நீங்கள் எல்லா உடைகளையும் அணிய முடியும். உங்களை தினமும் பார்ப்பவர்களுக்கு நீங்கள் புதிதாக தெரிவீர்கள்.
- கல்யாண கேசட்டை பத்திரமாக இருக்கட்டும் என்று உள் பீரோவில் வைப்பவர்கள் கை தூக்குங்க... நீங்க பத்திரமா வைத்த கேசட்டுகள் (பெரிய சைஸ் கேசட்டாக இருந்தால் அது பூஞ்சை பிடித்து வீணாகி விடும். சிடி அல்லது டிவிடியாக இருந்தால் பதிவான இடம் கிழிந்து போய் வீணாகி விடும். அதனால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது ப்ளேயரில் ஓட விடுங்கள். மலரும் நினைவுகளில் மூழ்கிய மாதிரியும் இருக்கும், கேசட்டை பாதுகாத்த மாதிரியும் இருக்கும்.