Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, August 15, 2014

குடும்பஸ்திரிக்கு சுதந்திர தினம் ஒரு கேடு.....

 

காலையில் படுக்கையில் புரண்டு, நேற்று நடந்ததை அசை போட்டு, இன்று நடக்க வேண்டியதை திட்டமிட்டு, இவ்ளோ நேரம் படுத்தாச்சு போ என எழுந்திரிக்க முடிவெடுத்து 'ஆவ்வ்வ்' என சத்தமாக சோம்பல் முறித்து, என் இஷ்டத்துக்கு எழுந்திருக்க முடியவில்லை.

பல் விலக்கி முகம் கழுவியதுமே முதல் நினைவாக விளக்கேற்றி சாமி கும்பிட்டு திருநீறு வைக்க முடியவில்லை.

கெண்டைக்கால் தெரிவதை பற்றி கவலைப்படாமல் நைட்டியுடன் காலை மடக்கி உட்கார்ந்து, கிட்டத்தட்ட படுப்பதுபோல் குனிந்து, பக்கம் கசங்காமல் வரும் செய்தித்தாளை பக்குவமாக பிரித்து கண்களை ஈர்க்கும் தலைப்புச்செய்திகளை தேர்ந்தெடுத்து காபி பருகியவாறு விவரமாக படிக்க முடியவில்லை.

பிடித்த உப்புமாவோ, ஈஸியான தோசையோ, வேலையை ஐந்து நிமிடத்தில் முடிக்கும் இட்டிலியோ, ஒரே வேலையாக மதியத்திற்கும் சேர்த்து சாதமோ வைப்பது என் இஷ்டமாக  இல்லை.

நேரம் இருப்பதை வைத்து சட்னி, டிபன் குழம்பு, மதிய குழம்பு, ரசம் என எல்லாமே செய்வதோ, நேரம் போதாமல் டிபனுக்கு பொடிவைத்துகொண்டு, மதியத்திற்கு நெய், தயிர், ஊறுகாய் எடுத்துக்கொள்வதோ என் முடிவாக இல்லை

மாத விலக்கு நாட்களில் மட்டும் சாமி என்னை பாத்துக்காதா ? அப்பவும் என்னை பாத்துக்கும் ல. அப்படின்னா அந்த நாட்களிலும் தான் நான் சாமி கும்பிடுவேன் என்று சொல்ல முடியவில்லை.

காயப்போடாமல் பெட்டில் போடப்படும் துண்டை தூக்கி எறிய முடியவில்லை.

பிடித்த வேலைக்கு செல்ல முடியவில்லை

வேலை பிடிக்கவில்லை என்று விட முடியவில்லை

குளித்ததே வேஸ்ட் என்று சொல்ல வைக்கும் பஸ் பயண நெரிசல் எதற்கு? என்று நடந்து செல்லும் தொலைவில் அல்லது ரெண்டு நிமிட வண்டி பயண தொலைவில் வீடு எடுத்துக்கொள்ள முடியவில்லை.

பஸ் ஸ்டாண்டில் கடந்து செல்லும் வேகத்திலேயே படுக்க கூப்பிடும் ஆட்களை செருப்பால் அடிக்க முடியவில்லை

கர்ப்பம் ஆகிவிட்டால் தனக்கு வேலைக்கு ஆள் கிடைக்காதே என்று நான் கர்ப்பம் ஆக விரும்பாத முதலாளியம்மாவிடம் உன் மகளுக்கும் மருமகளுக்கும் இப்படியே வேண்டிக்கோ என்று சொல்ல முடியவில்லை

ரோட்டில் எச்சில் துப்பும் ஆட்களை சப்பென்று அறை  விட முடியவில்லை

பகலில் வண்டி ஓட்டும் ஆண்களிடம் 'லைட் எரியுது' என்று சொல்ல முடியவில்லை

 வீட்டுக்கு வந்ததும் கை கால் கழுவாமல் பெட், சோபாவில் கால் வைப்பவர்களை பார்த்து கத்த முடியவில்லை

நாள் முழுக்க வேலை செய்துவிட்டு வந்தாலும் நைட் சமையல் செய்ய பெரிய சலிப்பு ஒன்றும் இல்லாவிட்டாலும், பாத்திரத்தை கூட விளக்கி குடுக்க வராததற்கு கடுப்பாக முடியவில்லை

பாலையும் நானே தான் ஆத்தி குடுக்கணுமா ? இதைகூட செய்து கொடுக்காம டிவியே  கதி மொபைலே கதின்னு இருக்கியா ன்னு கேட்க முடியவில்லை

 பக்கத்தில் படுத்ததும் ஒரே ஒரு முத்தம் நெற்றியில் கொடுத்து 'எனக்காக எவ்ளோ செய்யற, எவ்ளோ மாறிட்ட' ன்னு சொல்லாமல், தூங்கிவிடும் வாழ்க்கை துணையை எழுப்பி நாலு கேள்வி கேட்க முடியவில்லை

எனக்கெல்லாம் சுதந்திர தினம் ஒரு கேடு.....

இருந்தாலும் இதை டைப் செய்ய சுதந்திரம் இன்னும் இருப்பதால் எல்லாருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்....


 
 
இந்த பதிவை பார்த்துட்டு உடனே நாலு தேச பக்தர்கள் சுதந்திர தினத்தை போய்  கேடு அது இதுன்னு சொல்றியே இது நியாயமா தர்மமா ன்னு பொங்க வருவாங்க.  அதுவும் அத்தனை பேரும் ஆண்களா இருப்பாங்க. ஏன்னா அவங்க அத்தனை பேரும் வீட்டுல சுதந்திரத்தை அனுபவிக்கறாங்க.
 
ஒரு தற்கால சராசரி இந்திய பெண்ணின் சுதந்திர தினம் பற்றிய பார்வை இப்படி தான் இருக்கு. இதை அவர்கள் மறுத்தாலும் இது தான் உண்மை. வேணா உங்க அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகளை கேட்டு பாருங்க  உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டில் சுதந்திர உணர்வை பெண்களுக்கு கொடுங்க சகோ....

நன்றி....