கோவை குப்புசாமி நாயுடு ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போனதும் அங்க தான் டாக்டர் எங்க அப்பா முன்னாடியே அம்மா கிட்ட 'எப்ப நெஞ்சு வலி வந்துச்சு என்ன ட்ரீட்மென்ட் குடுத்தாங்கன்னு' கேட்ட பிறகு தான் அப்பாவுக்கு விவரம் தெரிஞ்சுது. அதுக்கு பிறகு அவர் முகம் மாறிடுச்சு. எனக்கு பயங்கர கவலை ஆகிடுச்சு. உடனே ஐ.சி.யூ க்கு கூட்டிட்டு போய்ட்டாங்க.
அந்த ஹாஸ்பிடல் ல காலைல ஒருமுறை ரெண்டு பேர், சாயந்திரம் ஒரு முறை ரெண்டு பேர் மட்டும் தான் பேஷன்ட பார்க்க விடறாங்க. அதுவும் கையெழுத்து எல்லாம் வாங்கறாங்க. சும்மா எல்லாரையும் இஷ்டத்துக்கு உள்ள விடறது கிடையாது. ஒரு பெரிய வெய்டிங் ஹால் இருக்கு. டிவி இருக்கு. அங்க கம்முனு காத்துகிட்டு இருக்க வேண்டியது தான்.
அதே போல வெளியில இருந்து ஹாஸ்பிடலுக்கு உள்ளே வர்றதுக்கு சாயந்திரம் 4 மணி வரை வெயிட் பண்ணனும். மத்த நேரம் வெளில இருந்து உள்ளே வரணும்னா ஒரு கார்டு தர்றாங்க. ஒரு கார்டுக்கு 2 பேர் போகலாம். அங்க இருந்த 2 வாரமும் நாங்க ஒரு அஞ்சு பேர் உள்ளே இருந்துகிட்டு அந்த கார்டை உபயோகிச்ச லட்சணத்துல அந்த கார்டே இத்து போயிடுச்சுன்னா பார்த்துக்கங்களேன்...
சும்மா சொல்லக்கூடாது... நல்லா மெயின்டெயின் பண்றாங்க. நீட்டா இருந்துச்சு. வெளியில இருந்து உணவுப்பொருட்களை உள்ளே கொண்டுபோகக் கூடாது. அங்க யாராவது உங்களுக்கு தெரிஞ்சவங்க படுத்திருக்காங்கன்னு பார்க்க போனால் வெறும்கைய வீசிட்டு போங்க. மீறி கொண்டு போனால் நுழைவுலயே வாங்கி வெச்சுடுவாங்க.
ஐயையோ.. அப்பாவை அப்படியே விட்டுட்டேன் பார்த்தீங்களா... அப்பா ஐ.சி.யூ ல இருந்த வரைக்கும் அவரை அதிகமா பார்க்க முடியல.சொந்தக்காரங்க நண்பர்கள்ன்னு யாராவது வந்துகிட்டே இருந்தாங்க. அவங்கள மரியாதைக்காக எங்களுக்கு பதிலாஅனுப்பிகிட்டு இருந்தோம். அப்பறம் தான் 'அடடா அவருக்கு ஏதாவது வேணும்னா நம்ம கிட்ட தான கேப்பாரு'ன்னு திடீர் ஞானோதயம் வந்து , யார் பார்த்தாலும் சரி பாக்காட்டியும் சரின்னு, கண்டிப்பா அம்மாவ அனுப்பினோம். ஐ.சி.யூக்கு ஒரு நாள் வாடகை 5000.
முதல் நாள் சாயந்திரம் டாக்டர் வந்தார். பார்த்தார். எங்க எல்லாரையும் கூப்பிட்டார். 'ஐயாவுக்கு ரொம்ப சீரியஸா தான் இருக்கு. ஒண்ணும் சொல்ல முடியாது. எங்களால ஆனதை செய்யறோம். அவ்ளோ தான் முடியும்'ன்னு சொல்லிட்டாரு. திரும்பி எங்க அம்மாவ பார்த்தா அவங்க மயக்கம் போடற ஸ்டேஜுக்கு போய்ட்டாங்க. இப்படியா மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லுவாங்க? கேக்கறவங்களுக்கு ஏதாவது ஆயிடாதான்னு கோவம் கோவமா வந்துச்சு. அம்மாவை வெளில கூட்டிகிட்டு வந்து 'டாக்டர் சொன்னா சொல்லிட்டு போறார் ம்மா. அவர் வேணும்னே நம்மள காசுக்காக பயமுறுத்தறார்.அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது.' ன்னு எல்லாரும் சமாதானப்படுத்திட்டோம் . கொஞ்ச கொஞ்சமா அவங்களும் தைரியம் ஆகிட்டாங்க.
அன்னைக்கு சாயந்திரமே 'மூச்சு விட அவரால முடியல. தற்காலிகமா அவருக்கு பேஸ் மேக்கர் வைக்கறோம். அதுலயே சரி ஆகிடுச்சுன்னா ஓகே. இல்லாட்டி நிரந்தரமா வைக்கணும்'னு சொல்லிட்டாங்க. அதுக்கு ஒரு நாளைக்கு வாடகை 7000. அப்பறம் 2 நாள் கழிச்சு ஆஞ்சியோகிராம் பார்த்தாங்க. அதுக்கு 30,000 ன்னு நினைக்கறேன். ஒரு ட்யுபை கை நரம்பு வழியா உள்ளே விட்டு அதுல டை அப்படிங்கற மையை அனுப்பறாங்க. அந்த மை நெஞ்சுல வரும்போது அடைப்பு எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கறாங்க. அதை ஒரு cd ல தந்தாங்க. அதுல பார்த்து தெரிஞ்சுகிட்டோம். அதுல ஒரு பெரிய அடைப்பும், 2 சின்ன அடைப்பும் இருக்குன்னு சொன்னாங்க. பெரிய அடைப்புக்கு ஸ்டென்ட் போடணும். சின்னது ரெண்டையும் மாத்திரையிலேயே கரைச்சுடலாம்ன்னு சொன்னாங்க. நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்.
நெஞ்சுக்கு மேலாக தோலை திறந்து சிம் கார்டு சைசுக்கு ஒரு மெஷினை உள்ளே வைக்கறாங்க. அது யு.பி.எஸ் போல வேலை செய்யும். இதயம் நன்றாக துடிக்கும்போது அதற்கு வேலை இல்லை. இதய துடிப்பு தொய்வடையும் போது இது ஷாக் குடுத்து வேலை செய்ய வைக்கும். அவ்வளவு தான். இந்த செலவு ரூ. 1,30,000. இந்த ஆபரேஷனுக்கு அப்பறம் தான் அப்பாவை பக்கத்துலயே வெச்சு பார்க்கற மாதிரி வார்டுக்கு மாத்தினாங்க. அப்பாவை மறுபடியும் எப்ப வேணாலும் பார்க்கலாம்ங்கற பீல் இருக்கே... அதை மறக்கவே முடியாது.
நிரந்தர பேஸ் மேக்கரை உடனடியாக பணம் கொடுத்தும், ஆஞ்சியோ ப்ளாஸ்டை முதலமைச்சர் காப்பீட்டிலும் பண்ணினோம். இதுல ஆச்சரியம் என்னான்னா எங்க செலவுல பார்த்துகிட்ட வரைக்கும் மருந்து பில் ஒரு தடவைக்கு 1000 ரூபாய்களாவது ஆகும். காப்பீடு திட்டத்துக்கு மாற்றியதுல இருந்து 100, 150 ஐ தாண்டல. நிஜம். பொது வார்டில் வைத்து கவனித்து ஒரு நல்ல நாளில் ஆஞ்சியோ ப்ளாஸ்ட் செஞ்சாங்க.
முதலில் சொன்னது போலவே கை நரம்பு வழியாக ட்யுபை சொருகி பலூன் அல்லது ஸ்ட்ரா போன்ற ஒன்றை அனுப்பி அடைப்பு உள்ள இடத்தில் பொருத்தி அந்த பலூனை விரிக்கிறார்கள். ஒன்றை கவனிக்கவும். கொழுப்பாலான அடைப்பை நீக்குவதில்லை. ஜஸ்ட் அமுக்கி வைக்கறாங்க. அவ்வளவு தான்.பைபாஸ் என்றால் தான் நெஞ்சை பிளந்து அடைப்பை நீக்கறாங்க. ஆஞ்சியோவுக்கு ஆபரேஷன் நடந்த சுவடு கூட இல்லை. நிரந்தர பேஸ் மேக்கரை பொருத்திய சுவடு மட்டுமே அப்பாவுக்கு இருக்கு. ஆஞ்சியோ பண்ணினாங்களா இல்லையான்னு கூட சுவடு தெரியாது. இதுக்கு செலவு ரூ. 60,000.
அப்பா பேரை போட்டு பேஸ் மேக்கர்க்கு ஒண்ணு , ஆஞ்சியோக்கு ஒண்ணு ன்னு ரெண்டு CD கொடுத்திருக்காங்க. இந்த ஆஞ்சியோ , பேஸ் மேக்கர் எல்லாம் ரகத்துக்கு ஒண்ணுன்னு இருக்கு. ஒவ்வொன்னும் ஒவ்வொரு விலை. பிரச்சனையை பொறுத்து நாம தேர்ந்து எடுத்துக்கணும். பேஸ் மேக்கர் 2,25,000க்கு கூட இருக்கு. தேவையான்னு நீங்க நினைக்கறதை பொறுத்தது.
நல்ல விஷயம் என்னன்னா ஆபரேஷன் நடந்த அரை நாளில் வீட்டுக்கு வந்துடலாம். அப்பா எதுக்கும் ஒரு நாள் இருந்து பார்த்துட்டு போலாம்னு இருந்துட்டு வந்தாரு. ஒரு மாசம் அடக்க ஒடுக்கமா டாக்டர் என்ன சொன்னாரோ அதை கேட்டு அப்படியே நடந்துக்கிட்டாரு. தினமும் வாக்கிங். ஒரு லிட்டர் அளவே தண்ணீர். எண்ணை இல்லாமல் உப்பு குறைவாக உணவு. அப்பப்ப அம்மா கூடவும் என்கூடவும் சண்டைன்னு இப்ப எங்க அப்பா ஆரோக்கியமா இருக்கார் :)
பின் குறிப்பு:
மொத்த செலவும் ஒரு நாலரை இலட்சத்தை தாண்டியதாக கேள்வி.
8 comments:
அட பணத்தை விடுங்க... அவர் நலமாக என்றும் இருக்க வேண்டும்...
நல்லது. நலமானதே போதும்ங்க!
மத்தவங்களோட பொது அறிவுக்காக தான் செலவு சம்பந்தமான குறிப்புகள் குடுத்திருக்கேன் மத்தபடி ரமணா ல சொல்ற மாதிரி எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லன்னு அப்பாவ எப்படினாலும் காப்பாத்தி இருப்போம் :)
God bless him!
நலமுடன் இருத்தல்தான் முதல் சந்தோஷம்...
பணம் போகட்டும்...
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.வாழ்த்துக்கள்
சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/03/blog-post_7.html?showComment=1394170736456&m=1#c2285551787432289175
நன்றி
அன்புடன்
ரூபன்
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!
வலைச்சர தள இணைப்பு : அவியல் - பலவகைத் தளங்கள்
வாழ்த்துகள் ! உங்கள் தந்தையார் நலமடைந்ததற்கும், மருத்துவமனை நடைமுறைகள் பற்றி யாவரும் அறியும்படி தகவல் பகிர்ந்தமைக்கும் வாழ்த்துகள்.
Post a Comment