Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, September 23, 2012

"ஏய்... நீ சுத்தற மிட்டாய் சாப்பிட்டிருக்கியா?"

"ஏய்... நீ சுத்தற மிட்டாய் சாப்பிட்டிருக்கியா?"
சாக்லேட் விளம்பரத்தை பார்த்துக்கொண்டிருந்த என் கணவர் திடீரென கேட்டார். சட்டென பிடித்த மழை போல என் குழந்தை பருவ குதூகலம் என்னை நனைக்க தொடங்கியது. முகம் முழுக்க சந்தோஷத்துடன் "ஓ.... " என பதில் சொல்வதில் ஆரம்பித்த எங்கள் உரையாடல் யார் யார் என்னென்ன வகையான மிட்டாய்களை சாப்பிட்டிருக்கிறோம் என்ற போட்டி களைகட்டியது.

 பட்டன் போன்ற மிட்டாயின் நடுவில் நூல் கோர்க்கப்பட்டு சுற்றி வைக்கப்பட்டிருக்கும் சுத்தற மிட்டாயை வாங்கி  ரெண்டு கைகளிலும் உள்ள நடுவிரல்களில்  நூலை நுழைத்துக்கொண்டு விர்விர்ரென்று வேகமாக முன்னும் பின்னுமாக சுற்றி, ரெண்டு கைகளையும் விலக்க, நூல் வேகமாக ஒரு vibration உடன் சுற்றும். அவ்வப்போது நூலுடனே அந்த மிட்டாயைச் சப்பிக்கொண்டு, மீண்டும் வெளியில் எடுத்து மீண்டும் விளையாட்டு என விளையாடிக்கொண்டே சாப்பிட்ட அந்த மிட்டாயை மறக்க முடியுமா?

கருப்பு கலரில் இருந்து ரோஸ், ஆரஞ்சு, பச்சை என கொஞ்ச நேரத்துக்கு ஒரு கலர் என்று கலர் மாறும் மிட்டாயும் நினைவுக்கு வருகிறது.

வாயெல்லாம் ரோஸ் கலர் வழிய கடைவாய் பற்களில் அழுத்தமாக ஒட்டிக்கொள்ளும்  மிட்டாயை 'அவ் அவ்' என்று அழுந்தி கடித்தே கரைத்த ஜவ்வு மிட்டாய் இன்னும் நினைவில் இருக்கிறது. நான் என் அத்தை பெண்ணுடன் 'குட்  ஷெப்பர்ட்' ஸ்கூலில்  படித்த போது வழியில் உள்ள செட்டியார் கடையில் வாங்கி வீடு வரும் வரையில் சாப்பிட்டது யு.கே.ஜி.யில் என்றாலும் இன்னும் மறக்கவில்லை.

கலைமகள் ஸ்கூல் அருகே ஒரு தாத்தா கை தட்டும் பொம்மையை  வைத்து கூப்பிட்டு அதன் காலாக மாறிவிட்ட பம்பாய் மிட்டாயை இழுத்து கையில் வாட்ச் கட்டி, கழுத்தில் செயின் போட்டு கன்னத்தில் கொசுறாக ஒரு இழுக்கு இழுக்கி கொசுறு தரும் போது பெருமையா இருக்கும். பசங்கன்னா செயினுக்கு பதில் மீசை கிடைக்கும்.

சளி மிட்டாய் என்றொரு மிட்டாய். சளி பிடிக்காத மிட்டாய் என்று பேர் வைத்திருக்க வேண்டியது. இப்படி மாறி விட்டது. இதுவே தான் சூடம் மிட்டாய் என்றும் பேர் கொண்டது என்று நினைக்கிறேன். கண்ணாடி போன்ற நிறத்தில் விக்ஸ் ஆக்க்ஷன்  மாத்திரையின் வடிவத்தில் அதிக இனிப்பில்லாம இருக்கும். இனிப்பு குறைவு என்பதால் அது என் சாய்ஸில்  வந்ததில்லை.

உண்மையான தேன்  மிட்டாய்.... தேங்காயிலோ எதிலோ செய்யப்பட்டு நடுவில் தேன்  ஊறிக்கொண்டிருக்கும் மிட்டாயே தேன்  மிட்டாய். இப்போது சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த மிட்டாயில் தேன்  இருப்பதில்லை. சர்க்கரை பாகே இருக்கிறது.

கடுக்காய்  மிட்டாய் என்று ஒரு மிட்டாய் கிடைக்கும். பிரவுன் கலரில்  இருக்கும். வாயில் போட்டதும் பச்சென்று ஒரு வாசம் பரவும் . போதும் போதுமென ஊறவைத்து கடித்தால் தேங்காயில் செய்தது என்று தெரிய வரும்.

பீடா மிட்டாய் என்றொரு வகையும் உண்டு. ரோஸ் கலரில் இருக்கும். வாயில் போட்டதும் இது வெத்தலை போட்டது போல வாயை சிவக்க வைத்து விடும். மூணாவது படிக்கறப்ப எங்க கிளாஸ்ல இருந்த ரெண்டே பசங்கள்ல  ஒருத்தனான சச்சு மைதீன் பேச்சை கேட்டு வாட்டர் பாக்ஸில் ரெண்டு மிட்டாயை போட்டு,  நாள் முழுக்க மிதமான இனிப்பு தண்ணீரை குடித்தது இப்போது இதழோர நகையை கொண்டு வருகிறது.


கம்மர்கட் ..... கடிக்க முடியாத உறுதியுடன் இருக்கும் அருமையான மிட்டாய். வட்ட வடிவத்தில் இருக்கும். வாயில் ஒரு பக்கம் அதக்கிக்கொண்டு, எனக்கு காயமாகி வீங்கிடுச்சு என்று பொய் சோகத்துடன் குறும்பாக நடிப்போம். பதிலுக்கு அம்மாவிடமிருந்து  பொய் ஆறுதலும் கிடைக்கும்.

 தமிழனின் பெயரிடும் திறமைக்கு சான்றாக விளங்குவது எலி புழுக்கை மிட்டாய் ... அதாங்க சீரக மிட்டாய். சைஸையும் உருவத்தையும் பார்த்து பயபுள்ளைங்க அப்படி ஒரு பேர் வெச்சிருக்கோம்.

இது எல்லாத்துக்கும் ராஜா  ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு சுளை வடிவில் இருக்கும் எல்லா கலரிலும் கிடைக்கும் பெரும்பாலான பிறந்த நாள் கொண்டாட்டங்களில் இந்த மிட்டாயே கொடுக்கப்படும். காகிதத்தில் சுற்றிய சாக்லேட்டுகள் கொடுத்தால் அவங்க பெரிய ஆள்.

குறிப்பு : கூகுளில் இந்த இனிப்பு குறித்த படங்கள் எதுவும் கிடைக்காதது வருத்தமே. . .

இந்த பதிவை இடும்போது சில மிட்டாய்களின்  பேர் மறந்து போய்டுச்சு. என்னோடு சேர்ந்து கூத்தடித்த கஸின்களிடம் தனித்தனியாக கேட்டேன். போனை எடுத்தது எப்போதும் போல பார்மாலிடியாக பேச ஆரம்பித்தவர்கள் 'டேய், சுத்தற மிட்டாய் மாதிரி நாம என்னென்ன மிட்டாய்ங்க  சாப்பிட்டோம்?" ன்னு  கேட்டதும் சொல்லி வைத்தது போல அத்தனை பேரின் குரலிலும் அவர்களின்  குழந்தை பருவம் குபுக்கென வெளியே கொட்டியது. லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவனாகட்டும், கலைஞர் டிவி ஒளிப்பதிவாளராகட்டும், திருமணம் ஆகாதவனாகட்டும், பதின்ம வயதில் பையன் உள்ளவராகட்டும், அதெல்லாம் Doesn't matter என்பதாக அந்த குதூகலம் இருந்தது . 'இது இந்த மிட்டாய். இது இப்படி இருக்கும். இல்ல இல்ல . இப்படி இருக்கறது அந்த மிட்டாய். இந்த மிட்டாயை இப்படியும் சொல்லலாம்' என்றெல்லாம் அந்த பேச்சு நீண்டது. இந்த நாள் முழுக்க அவர்களுடைய குழந்தை பருவம் அவர்களோடு இருக்கலாம். மேலே குறிப்பிட்ட எல்லா இனிப்பையும் மறந்தாலும் அவர்களின் குரல்களில் இருந்த இனிப்பு என்றும் எனக்கு மறக்காது.


 

7 comments:

சே. குமார் said...

மறக்க முடியுமா இந்த மிட்டாய்களை...
அதிலும் சுத்துற மிட்டாய் சாப்பிட்டுட்டு அதே மாதிரி சோடா மூடியில் செய்து விளையாடியதும் உண்டு...

கோவை நேரம் said...

எனக்கும் இந்த சுத்துற மிட்டாய் தெரியும்..சாப்பிட்டு இருக்கிறேன் சுத்த விட்டு..அதுக்கப்புறம் சோடா மூடியில் ஒட்டை போட்டு சுத்தி இருக்கிறேன்.

காரிகன் said...

ஆஹா இனிப்பான பதிவு.. என் சிறுவயது நண்பன் ஒருவன் பத்து பைசாவுக்கு பார்த்து பார்த்து ஒரு பைசா மிட்டாய்களை கை நிறைய வாங்கி வருவான். நீங்கள் சொன்ன எல்லாமே என் விருப்பமே இருந்தாலும் கல்கோனா அதாங்க கமர்கட்டு முன்னாடி எதுவும் நிக்க முடியாது.. அப்பறம் கடலை மிட்டாய்..பெப்சி கோக் லேஸ் பீட்சா பர்கர் நூடுல்ஸ் என்று நம் மண் வாசனை இல்லாத அலங்கார போதைகளில் இந்த இனிப்புகள் ஒரு அனுபவமாக மாறிவிட்டன.. என்ன செய்வது இது போன்ற பதிவுகளிலாவது அதை பகிர்ந்து கொள்வோம்.

கோவை மு சரளா said...

நானும் சாப்பிட்டு இருக்கிறேன் தோழி நீ குறிப்ப்பிட்ட அனைத்து மிட்டாய்களையும் .......உண்மையில் இன்றும் அதை பற்றி சொல்லும் போது ஒரு குழந்தையை போல குதுகலிக்கும் மனதை உணர முடிகிறது ....மகிழ்வான தருணங்களின் நினைவுகளில் மட்டுமே வாழ்க்கை சக்கரம் சுழலுகிறது ....நன்றி நினைவை திரும்ப அசை போட வைத்ததற்கு

தி.தமிழ் இளங்கோ said...

எனது பள்ளிப் பருவத்தில், பள்ளிக்கூட வாசலில் நான் வாங்கி சுவைத்த அத்தனை இனிப்புகளையும் நினைவில் கொண்டு வந்தது உங்கள் பதிவு. நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

பழைய இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...

Easy (EZ) Editorial Calendar said...

அப்படியே பள்ளி பருவத்தில் உள்ள இனிமையான நினைவுகளை அள்ளி வருகிறது..பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)