Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, November 2, 2010

ஒரு தந்தையின் கவிதை

சமீபத்தில் எனக்கு ஒரு மெயிலில் பின்வரும் கவிதை வந்தது. ரத்தப்புற்று நோய் வந்த ஒரு ஜிம்பாப்வே சிறுமியின் தந்தை பாடுவதாக அமைந்திருந்தது. சற்றே பெரிய கவிதை தான். என்னால் முடிந்த அளவு தமிழ் படுத்தி இருக்கிறேன். இது நோயுற்ற சிறுமியின் தந்தை மட்டுமல்ல, இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள்  வேலை பளுவின் காரணமாக தங்கள் குழந்தையிடம் இழந்த விஷயங்களை பற்றி கூறுவதாக அமைகிறது. உங்களாலும் ரசிக்க முடியும் என நினைகிறேன்.

என் குழந்தைக்காக...
இந்த‌ காலையாவது
உன் முகத்தை பார்த்ததும்
புன்னகைக்கப்போகிறேன்

இந்த‌ காலையாவது
நீ எதை அணிய விரும்புகிறாயோ,
அதையே அணிய விட்டு,
'மிக அருமை' என்று புன்னகைக்கப் போகிறேன்

இந்த‌ காலையாவது
லாண்டரிக்கு போகும் வழியில்
உன்னை பார்க்கில் விளையாட விட்டு
கூட்டி வரப்போகிறேன்

இந்த‌ காலையாவது
எல்லா சமையல் பாத்திரங்களையும்
கழுவும் இடத்தில் போட்டுவிட்டு
விடுகதைகளை கண்டுபிடிப்பது எப்படி என
கற்றுத்தரப்போகிறேன்

இந்த மதியமாவது 
தொலைபேசியின் இணைப்பை துண்டித்து,
கணிணியையும் அணைத்துவிட்டு
கொல்லைப்புறத்தில் உன்னுடன் அமர்ந்து
சோப்புக்குமிழியை ஊத‌ப்போகிறேன்

இந்த மதியமாவது 
ஐஸ்வண்டியை பார்த்து அடம்பிடிக்கும் உன்னை,
கத்தி அடக்காமல் உனக்காக ஒரு ஐஸ் வாங்கி கொடுக்கப்போகிறேன்

இந்த மதியமாவது
நீ வளர்ந்ததும் என்ன ஆவாய் என்பது பற்றி 
கவலைபடாமலும், நீ விரும்பும் எதைபற்றியும்
மாற்றுக்கருத்து கூறாமலும் இருக்க போகிறேன்

இந்த மதியமாவது
நான் 'குக்கி' செய்யும்போது
உன்னை எனக்கு உதவ அனுமதிக்கபோகிறேன்

இந்த மதியமாவது
உன்னை 'Mc Donald's' க்கு கூட்டிச்சென்று
இரண்டு பொம்மைகள் வாங்கி தரப்போகிறேன்

இந்த மாலையாவது
உன்னை என் கைக்குள் இறுக்கிக்கொண்டு
நீ எப்படி பிறந்தாய் மற்றும்
நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று
கதையாய்  சொல்லப்போகிறேன்

இந்த மாலையாவது நீ
தண்ணீர் தொட்டியில் குதிப்பதற்கு
கோபப்படாமல் இருக்கப் போகிறேன்

இந்த முன்னிரவிலாவது
என்னுடன் உன்னை விழித்திருக்க அனுமதித்து
எல்லா நட்சத்திரங்களையும் எண்ண
அனுமதிக்கப்போகிறேன்

இந்த முன்னிரவிலாவது
எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சிகளை துறந்து
உனக்கு அருகில் மணிக்கணக்காக படுத்து
உனக்கு கதகதப்பினை கொடுக்க போகிறேன்

இந்த முன்னிரவிலாவது
நீ பிரார்த்தனை செய்யும்போது
உன் முடியினை கோதியவாறு,
உன் போன்ற மிகப்பெரிய பரிசை கொடுத்ததற்காக
கடவுளிடம் நன்றி சொல்லிக்கொடிருக்கப்போகிறேன்

மேலும், இன்று குட்நைட் சொல்லி முத்தமிடும்போது
உன்னை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக,
இன்னும் கொஞ்சம் அதிக நேரம் கட்டிகொண்டிருக்கப்போகிறேன்

இந்த முன்னிரவிலாவது
தங்களது தொலைந்து போன குழந்தைகளை தேடும்
அம்மா அப்பாக்களை பற்றியும்
தங்கள் குழந்தைகளை படுக்கை அறையில் பார்ப்பதற்கு  பதிலாக
சுடுகாடுகளில் போய் பார்க்கும் அம்மா அப்பாக்களை பற்றியும்
மருத்துவமனை அறைகளில் 
நோயால் அவதிப்படும்  தங்கள் குழந்தைகளை 
கவனித்துக்கொண்டிருக்கும் அம்மா அப்பாக்களை பற்றியும்
நினைத்துக் கொண்டிருக்கப்போகிறேன்

அதன் பின் கடவுளிடம் உனக்காக
நன்றி சொல்லி கேட்கப்போகிறேன்
'வேறெதுவும் வேண்டாம்...
இன்னும் ஒரு நாள் மட்டும் கொடு' என்று...

                குழந்தைகள் எவ்வளவு பெரிய பரிசு! அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் நோக்கில்,  நாம் நமக்கு எது தேவையோ அவற்றை அவர்கள் மீது திணிக்கிறோம், நமக்கு எது வேண்டுமோ அதை அவர்களுக்காக சேர்க்கிறோம். முட்டாள் தனமாக இல்லை? உண்மையில் அவர்களின் எதிர்பார்ப்பு அரண்மனை போன்ற வீடு, கார், என பெரிய செலவு வைக்கும் விஷயங்கள் அல்ல. மிக மிக சாதாரணமானவையே.  நீங்கள் உங்கள் குழந்தைகளை நேசித்தால், அவர்களுக்காக ஏதேனும் செய்ய நினைத்தால்  செய்ய வேண்டியது, அவர்களுக்கு பிடித்ததைத்தான். உங்களுக்கு பிடித்ததை அல்ல.
 
இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றி!

4 comments:

எல் கே said...

மெயிலில் ஆங்கிலத்தில் படித்தேன். தமிழில் பகிர்ந்ததற்கு நன்றி

மாணவன் said...

///உங்கள் குழந்தைகளை நேசித்தால், அவர்களுக்காக ஏதேனும் செய்ய நினைத்தால் செய்ய வேண்டியது, அவர்களுக்கு பிடித்ததைத்தான். உங்களுக்கு பிடித்ததை அல்ல///

மிகச்சரியாக சொன்னீர்கள்...

கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அருமை
தமிழில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

Avargal Unmaigal said...

அருமையான பதிவு. நான் எப்போதும் என் குழந்தையிடம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன். உங்கள் பதிவு படித்த பிறகு கிடைக்கும் ஓவ்வொரு நிமிடமும் என் குழந்தையிடம் நேரம் செலவிடுவேன், இது போன்ற சிறந்த பதிவுகளை எழுதுங்கள். வாழ்க வளமுடன்

சுபத்ரா said...

கவிதை மனதைக் கனக்கச் செய்தது தோழி... தமிழாக்கம் அருமை!