சாமி கும்பிடுபவர்கள் மட்டும் படித்தால் போதுமானது. இது அவர்களுக்கான பதிவு மட்டுமே.. மற்றவர்கள் இதை படித்து உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம். கடவுளின் உருவ வழிபாட்டை பற்றி எழுதிய போது இதை டைப் செய்து வைத்தேன். ஆனால் இந்த பதிவை post செய்ய மனம் வரவில்லை. அரைகுறை மனதுடன்தான் post செய்கிறேன். பெரியார் கூட மூட நம்பிக்கைகளை தான் வெறுத்தாரே தவிர கடவுள் வழிபாட்டுக்கு தடை விதிக்கவில்லை. அதனால் தான் அவர் ஈரோட்டில் உள்ள 2 , 3 கோவில்களுக்கு கமிட்டி மெம்பராக இருந்திருக்கிறார். மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் சாமி கும்பிடும்போது 'பெரியவங்க சொல்லி இருக்காங்க' என்ற ஒற்றை வார்த்தையை பிடித்துகொண்டு கும்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு 'ஏன் சொல்லி இருக்கிறார்கள்' என்று சொல்ல முயற்சித்தது தவறா? நான் என்னை ஆத்திகர் என்று குறிப்பிட்டிருக்க கூடாது என நினைக்கிறேன். ஓகே. mind ல வச்சுக்கறேன். அப்பறமா use பண்ணிக்கறேன். விஷயத்திற்கு வருவோம்.
விலங்குகள்உருவத்தில் கடவுளை வழிபடுவது ஏன்?
கடவுள் எந்த உருவத்தில் இருப்பார் என்பது உறுதியாக தெரியாத நிலையில் இந்த விலங்குகளின் முகங்களை வேறு கடவுள் உடலோடு (சில சமயம் மனித உடலோடு) எதற்காக நம் முன்னோர் இணைத்திருக்கிறார்கள்? இது எல்லோருக்கும் வரும் சந்தேகமே... இதற்கு நான் எழுத்தாளர் திரு. பாலகுமாரனின் கருத்தை கொண்டு இங்கு பதிகிறேன்.
பொதுவாக நம் மூச்சை கவனித்தால், நாம் கோபப்படும்போது, கவலைப்படும்போது, காம வசப்படும்போது, வெறுப்படையும்போது என negative விஷயங்களில் ஈடுபடும்போது மூச்சு கீழ்நோக்கி வேகமாக பாயும். இதை தான் அதோகதி என்பார்கள். (அதோ=கீழ்நோக்கி ; கதி = பாய்தல்) உங்கள் காமம், கோபம், குரோதத்தை அக்கணம் கட்டுப்படுத்த நினைத்தால் உடனே நீங்கள் உங்கள் மூச்சை சிறிது சிறிதாக மேல்நோக்கி முடிந்தவரை இழுத்துப்பாருங்கள். உங்கள் மனம் மாற்றமடையும். எனவே எப்போதும் நம்மை நம் மூச்சு நல்லவிதமாகவோ, கெட்ட விதமாகவோ கட்டுப்படுத்துகிறது. எனவே நாம் நம் மூச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு ஞாபகப்படுத்த தான் யானை முகம் கொண்ட விநாயகர்.
அவ்வளவு பெரிய தும்பிக்கையின் மூலமாக மூச்சை இழுக்க நேரமாகுமல்லவா? அது போல நாமும் நம் மூச்சை நிதானமாக நீளமாக இழுக்க வேண்டும். அதன் மூலம் பிராண சக்தி நம் உடல் முழுதும் பரவி உடலும் மனமும் நல்ல நிலையில் இருக்கும். மேலும் .நான் என் கட்டுப்பாட்டிலேயே தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக இவர் தன் கையிலேயே அங்குசமும் வைத்திருப்பார். நம்மில் எத்தனை பேர் நம் மனதை கட்டுப்படுத்த முடிகிறது? So, நம் மூச்சை கட்டுப்படுத்தினால், நம் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை புரியவைக்க நம் முன்னோர் அமைத்த உருவமே விநாயகர்.(நன்றி: பாலகுமாரன் - முதிர்கன்னி நாவல் )
அடுத்து, மனம் என்பதை ஒரு குரங்குக்கு ஒப்பிடுவார்கள். நாம் நம் கண்ணை மூடி சில நிமிடங்கள் அமர்ந்தாலே, மனக்குரங்கு பல திசைகளிலும் தாவி ஓடும். கண்டதையும் கையிலெடுத்து அக்கு அக்காக பிரித்து போடும். ஆனால் அனுமனின் உருவத்தை நாம் பார்த்தால் பெரும்பாலும் அது தியானம் செய்யும் நிலையிலேயே இருக்கும்.
இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு குரங்கு, நிலையில்லாமல் ஆட்டமாட கூடிய ஒரு விலங்கு, தன்னை கட்டுப்படுத்தி, தியானம் செய்கிறது. மனிதனான உன்னால் முடியாதா என நம்மை தூண்டி விட அந்த உருவத்தை கொடுத்திருக்கிறார்கள். மேலும், அனுமனின் தந்தையாக வாயுவை கூறுவதன் காரணம், வாயுவின் கவனிப்பால் குரங்கு உருவில் உள்ள அனுமன் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க முடிகிறது. அதுபோல, மூச்சை கவனித்தால் நாமும் மனம், உடலை கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும் என்பதை உணர்த்துகிறார்கள்.(நன்றி: பாலகுமாரன் - உச்சித்திலகம் நாவல் )
அதுபோல வராக உருவம். பன்றி எப்படி தனக்கு வேண்டிய உணவாகிய கிழங்கை (நான் அந்த காலத்து பன்றிய சொல்றேங்க) பூமிக்குள் மறைந்து இருந்தாலும் தன் முயற்சியால் அகழ்ந்து எடுக்கிறதோ அது போல நாமும் நம் மனதின் உள்ளே இருக்கும் கடவுளை, ஞான ஒளியை தேட வேண்டும் என்பதற்காக அந்த உருவத்தையும் கும்பிடுகிறோம்.
இப்படி நான் படித்த, கேட்ட, பார்த்த விஷயங்கள் மூலமாக எனக்கு சில விளக்கங்கள் கிடைத்தது. அதில் மூச்சுப்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்களும் உங்களுக்கு தெரிந்த உருவங்களை உங்களுக்கு கிடைக்கும் விளக்கங்களோடு பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள். கருத்துகளை பகிர்ந்து கொள்வோம். (இதை நாத்திகர் ஆத்திகர் வித்யாசமில்லாமல் பகிரலாம் தான். ஆனா என்ன பண்றது? பெரும்பாலும் ஆரோக்யமான விவாதமாக இருப்பதில்லை. அதனால் தான் சாமி கும்பிடறவங்க மட்டும்னு குறிப்பிட்டேன். யாரேனும் மனம் வருந்தினால் மன்னிக்கவும். உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. இதோட கடவுள் சம்பந்தமான விஷயத்தை நான் எழுதறத விட்டுடலாம்னு இருக்கேன். (முடியல... எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது...))
பின்குறிப்பு: நான் ப்ளாக் எழுத ஆரம்பித்து இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக ஆகாத நிலையில் என் பக்கம் 1600 முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பார்த்த அனைவருக்கும் நன்றி. follower ஆனவங்களுக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். HAPPY! :-)
இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.
19 comments:
வாழ்த்துக்கள்
நல்ல விளக்கங்கள்.
ஆனால் ஒன்றை நீங்கள் மிகவும் நன்றாக கவனித்தால் இந்த அவதாரங்கள் எல்லாம் மனிதர்களே என நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
கடவுள் என் மனிதன் என்கிற போர்வையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
விநாயகர் கதை தெரியும் என்றே நினைக்கிறேன். நீங்கள் செல்லும் வழியில் எதிரில் எவர் வருகிறார்களோ அவர் தலை கொய்து உயிர்ப்பியுங்கள் இச்சிறுவனை என்பதுதான் விநாயகர் புராணம். யானை அந்த வழி வந்து சேர யானை தலை விநாயகருக்கு பொருந்தி போனது. இது இன்றைய அறிவியலின் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முன்னோடி என சொல்வோரும் இருக்கிறார்கள்.
சில நேரங்களில் சில மனிதர்கள் விசித்திரமாக பிறப்பது உண்டு. அப்படிப்பட்ட ஒரு இனம் தான் அனுமர் வழி வந்தவர்கள். ஆனால் அவர்கள் முழுவதும் அழிந்து போய் இருக்க கூடும். அனுமார் கடவுள் இல்லை, அவர் அவதாரத்திற்கு ஒரு தொண்டர்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் எல்லாம் கோவிலில் வைத்து இருப்பார்கள். அவர்கள் எல்லாம் தெய்வங்கள் கிடையாது. மாரியம்மன் போன்ற ஊர் மக்கள் எல்லாம் ஊர் தெய்வங்கள் என சொல்வார்கள், ஆனால் அவை எல்லாம் தெய்வங்கள் கிடையாது. மனிதர்களே.
கடவுள் கற்பனைக்கே எட்டாதவர். இறைவன், நம்மால் அவர் இருப்பதையே அறிய இயலாதவர்.
இறைவன் பற்றி பேசினால் பேரானந்தம் ஏற்படும் என்றுதான் இதுவரை கேள்வி பட்டிருக்கிறேன்.
//இதோட கடவுள் சம்பந்தமான விஷயத்தை நான் எழுதறத விட்டுடலாம்னு இருக்கேன். (முடியல... எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது...)) //
ஆச்சர்யம் தான்.
இறைவன் பற்றி பேசும் இடம் இதுவல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் தான் வலி.
கடவுளை பற்றி நாம் பேச முடியாது. ஏனெனில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர். நான் கடவுள் சம்பந்தமான நம்பிக்கை மூலம் நம் முன்னோர் கூற வந்த கருத்துக்களை வெளிப்படுத்தவே அந்த இடுகைகளை இணைத்தேன். ஆனால் அவற்றில் கடவுளை பற்றி பின்னூட்டங்கள் வந்ததால் டாபிக் திசை மாறி விட்டது.
நானும் கேள்வி பட்டிருக்கிறேன், குடும்பத்தில் உள்ள மூத்தவர்களே குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார்கள் என்று.
//ஏனெனில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்.//
இந்த வாசகத்தையே தவறு என்றுதான் சொல்வேன். ஒருவர் சொன்னது எப்படி எல்லா உயிரினங்களுக்கும் சரியாகும்?
நான் கூறுவது உட்பட!
//இறைவன் பற்றி பேசும் இடம் இதுவல்ல//
எங்குமே இறைவன் பற்றி பேச வேண்டியதில்லை, இறைவன் மௌனத்தில் நிறைந்து இருக்கிறார். ஆனால் நாம் பேச வேண்டிய சூழலை உருவாக்கி கொள்கிறோம். மிக்க நன்றி.
//இறைவன் பற்றி பேசினால் பேரானந்தம் ஏற்படும் என்றுதான் இதுவரை கேள்வி பட்டிருக்கிறேன்.// நான் இந்த வரிக்காக 'இறைவனை பற்றி பேசும் இடம் இதுவல்ல' என்றேன். பேரானந்தம் ஏற்படவேண்டும் எனில் அந்த இடத்தில உள்ள அனைவரும் இறையை நினைத்துக்கொண்டு, அவனருளாலே, அவன் புகழ் பாடிக்கொண்டிருக்கும்போது பேசலாம். இங்கே எதிர் கருத்தாளர்களும் வருவதால், அந்த பேரானந்தம் மிஸ்ஸிங். வேறொன்றும் இல்லை.
கண்டவர் விண்டிலர் வாக்கியம் பற்றி நீங்கள் கொடுத்த பின்னூட்டத்தின் அர்த்தம் புரியவில்லை நண்பரே,
கண்டவர் விண்டிலர்.
விண்டவர் கண்டிலர்.
இப்பொழுது இந்த இரண்டு நிலைகளையும் அறிந்த ஒருவரால் தான் இவ்வாறு சொல்ல இயலும் என நாம் எடுத்துக் கொண்டால் முழு வாக்கியமும் பொய்யாகிவிடுகிறது.
ஏதாவது ஒரு நிலையை அடைந்து இருந்தால் ஒன்றை மட்டுமே சொல்லி இருக்கலாம்.
அப்படி இல்லாதபட்சத்தில் 'இப்படி இருக்கலாம்' என்கிற ஒரு 'தியரி' மட்டுமே இந்த வரிகளின் மூலம் காணப்படும் சாத்தியம்.
----------
//இங்கே எதிர் கருத்தாளர்களும் வருவதால், அந்த பேரானந்தம் மிஸ்ஸிங். வேறொன்றும் இல்லை. //
அடடா. எதற்கு எதிர் கருத்தாளர்கள் என நினைக்கிறீர்கள். அவர்களுக்கு தெரிந்தது அவர்களுக்கு, உங்களுக்கு தெரிந்தது உங்களுக்கு, எனக்கு தெரிந்தது எனக்கு.
இங்கே விழலுக்கு பாய்ச்சுவது என்று எதுவும் இல்லை. எல்லாம் கருத்து பரிமாற்றங்கள் மட்டுமே. சில வேளைகளில் வரம்பு மீறிய வார்த்தைகள் தென்பட்டால் நாம் வெட்டிவிடலாம். ஏனெனில் இது நமது வீடு. நமது வீட்டினை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு நமக்கே உள்ளது. :)
எழுதி கொண்டே இருங்கள்.
நல்ல பகிர்வு
விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் என்பதன் அர்த்தம் பேசறவங்க பார்த்திருக்க மாட்டாங்க. பார்த்தவங்க அதை பத்தி பேசமாட்டங்க என்பது தானே?
:) ஆமாம். அப்படித்தான் என்ன சொல்கிறோம் என புரியாமலே சொல்லி வைத்து இருக்கிறார்கள்.
பார்த்தவர்கள் அதைப் பற்றி பேசமாட்டார்கள் என்பது எப்படி உறுதியாக சொல்ல இயலும்?
பேசுபவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என எப்படி உறுதியாக சொல்ல இயலும்?
அதனால்தான் இந்த வாக்கியம் தவறு.
பார்த்தவரிடம் பார்த்தாயா என்று கேட்டால் பார்க்கவில்லை, பார்த்தேன் என ஒரு பதில் வந்தாக வேண்டும்.
பேசுபவரிடம் பார்த்தாயா என கேட்டால் ஒரு பதில் வந்தாக வேண்டும்.
பதிலே வராமல் போனால் என்ன அர்த்தம் என்பதை பின்னர் சொல்கிறேன்.
ஒரு சின்ன உதாரணம்...
உங்களுக்கு ராமானுஜர் கதை தெரியும் என்றே கருதுகிறேன்.
ராமானுஜர் தான் அறிந்த மந்திரத்தை உலகத்துக்கு எல்லாம் சொல்ல வேண்டுமென்றே வெளியில் சொன்னார்.
அதைப்போலவே பரமபுருஷர்கள் என கருதப்படுபவர்கள் தாங்கள் உணர்ந்த பேரருளை உலகம் அறிந்து கொள்ள வேண்டுமென தங்கள் உணர்வுகளை சொன்னார்கள்.
இப்பொழுது அவர்கள் பேசினார்கள் என்பதற்காக அவர்கள் பார்த்தது பொய் ஆகிவிடுமா?
பலர் பார்க்கமாலே பேசாமல் இருப்பதும் உண்டு.
எனக்கு தெரிந்து ஒரு அருமையான வசனம் உண்டு. ஒரு முறை ஒருவனை கேட்பேன். அவன் அமைதியாக இருந்தால் அவனை அறிவாளி என நினைப்பேன். பல முறை கேட்பேன், அப்பொழுதும் அவன் அமைதியாக இருந்தால் ஞானி என நினைப்பேன். ஆனால் கேட்டு கொண்டே இருந்தும் பதில் தராமல் இருந்தால் அவனை ஒரு மூடன் என நான் கருதுவேன். இதில் இருக்கும் நீதி என்னவெனில் ஒருவருக்கு தேவையானபோது பிரிதொருவரிடம் இருக்கும் நல்ல விசயமானது கிடைக்கவில்லையெனில் அதனால் பயனில்லை என்பதாகும். எனவே கண்டவர் விண்டிலர்; விண்டிலர் கண்டிலர் அனைவருக்கும் பொருந்தாது.
எனக்கு தெரிந்து மனிதர்களை தவிர எந்த ஜீவராசிகளும் இறைவன் பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. அதற்காக அந்த ஜீவராசிகள் எல்லாம் இறைவனை பற்றி உணர்ந்து இருக்கிறார்கள் என்று அர்த்தமா?
அவ்வாறு அந்த ஜீவராசிகள் இறைவன் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை என எனக்கு தெரிந்து இருப்பதால் அந்த ஜீவராசிகள் இறை உணர்வுகளுடன் இல்லை என சொல்வது நியாயமா?
ராமகிருஷ்ண பரஹம்சர் - விவேகானந்தர் பற்றி என்ன நினைகிறீர்கள் என்பது பொருத்து இந்த விண்டவர், கண்டவர் பற்றி பேசலாம்.
அருமையான விளக்கம் நண்பரே... இப்போது புரிகிறது. நன்றி. விண்டவர் கண்டவர் விளக்கம் ஓகே. பார்வையாளர்கள் உருவ வழிபாடு பற்றியும் பகிருங்களேன்.
இந்த உருவ வழிபாடு எல்லாம் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. அதைப் போலவே உருவமில்லாத வழிபாடும் அவசியமற்றது என்றே கருதுகிறேன்.
இறைவன் எவரும் தன்னை வணங்க வேண்டும் என வற்புறுத்தவும் இல்லை, தன்னை வணங்குபவர்களை வணங்க வேண்டாம் என மறுக்கவும் இல்லை. வணங்காமல் இருப்பவர்களை ஒதுக்கவும் இல்லை.
உருவ வழிபாடு, உருவமற்ற வழிபாடு சடங்கு, சம்பிரதாயம், மத கோட்பாடுகள் என எல்லாவற்றையும் கடந்த ஒரு அன்புமிக்க தெய்வீக நிலையைத்தான் மனிதர்கள் மனதில் உறுதியுடன் நினைத்து செயல்பட வேண்டும் என்பதுதான் எனக்குள் நான் நினைக்கும் ஒரு உண்மையான நிலை. இந்த அன்பு மட்டும் மனிதர்களிடம் ஆறாக பெருகி ஓடுமெனில் எவ்வித சட்டங்களும் அவசியமில்லை.
இத்தகைய சாத்தியமற்ற அறிவின் ஒளி அனைத்து மனிதர்களின் மனதில் படரும்போது சமத்துவம் நிலவிட அதிக வாய்ப்பு இருக்கிறது.
உருவ வழிபாடு குறித்து ஏகப்பட்ட கதைகள் உண்டு. அவ்வை கதை ஒன்று அதி அற்புதம். ஒரு முறை அவ்வை கடவுள் சிலை இருக்கும் பக்கம் பார்த்து கால் நீட்டி அமர்ந்து இருந்தாராம். இவ்வாறு அமர்ந்து இருப்பது இறைவனை அவமதிப்பது என அவ்வையிடம் சொன்னவுடன், எம்பிரான் இல்லாத இடம் எது என சொன்னால் அந்த பக்கம் கால நீட்டுகிறேன் என்றாராம் அவ்வை.
கோவிலில் தான் கடவுள் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் கோவிலில் சென்று உருவத்தை வழிபாடு செய்ய வேண்டும் என சொன்னது, அதாவது படிக்க நினைப்பவர் பள்ளிக்கு சென்றுதான் படிக்க வேண்டும் என்பது போல. பள்ளிக்கு சென்று படித்தால் சான்றிதழ் கிடைக்கும். அவ்வளவே. கோவிலுக்கு சென்றால் வெளியில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு பக்திமான் எனும் சான்றிதழ் அவ்வளவே.
ஒரு விசயத்தை கற்று கொள்ள வேண்டும் என ஆர்வமுள்ளவர் பள்ளிக்கு சென்றுதான் படிக்க வேண்டுமென்பதில்லை. இதைப்போலவே ஒரு நாயன்மார் தனது மனதில் கோவில் கட்டி பூஜித்தார் அங்குதான் தெய்வம் வந்தார் என்கிறது ஒரு புராணம்.
உலகின் வரலாற்றை படித்தால் பலர் தங்களது சொந்த முயற்சியால் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை ஆராய்ந்து முன்னேறி இருக்கிறார்கள் என தெரியும்.
ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் படித்தால் தான் மேதையாக வேண்டும் என இருந்தால் அங்கே படிக்கும் அனைவரும் மேதையாவதில்லை என்பதை குறித்து கொள்வது நலம்.
இறைவனை நம்மில் ஒருவராக்கி, நம்மில் ஒருவரை இறைவனாக்கி வணங்குவது என்பது நமது மக்களிடத்தில் பழகிப் போனதால் இந்த உருவ வழிபாடு தவிர்க்க முடியாத ஒன்றாகி போகிறது.
உணர்வுள்ள மனிதரிடம் இருக்கும் சக்தியை விடவா , உணர்வற்ற கல்லிடம் இருக்க போகிறது? என்கிற சிந்தனை அங்கே எழுவதில்லை. ஏனெனில் உண்டு என்றால் உண்டு, இல்லை என்றால் இல்லை எனும் ஒரு சிந்தனையற்ற தத்துவம் மனிதரால் ஏற்கப்பட்ட ஒன்று.
அடிப்படையில் அது ஒரு கல். செதுக்கிய பின்னர் அது ஒரு சிற்பம். இத்துடன் நிறுத்தி கொள்ள இயலாத மக்கள் இருக்கும் வரை உருவ வழிபாடு ஒருபோதும் அழியாது.
கடவுள் கல்லில் மட்டுமே இல்லை. நன்றி.
உங்கள் பதிவு, ராதாகிருஷ்ணனின் விளக்கம் எல்லாமே அருமை
நல்ல பகிர்வு, சிந்திக்க வைத்தது. தொடருங்கள்.
ராதாகிருஷ்ணன் அவர்களின் விளக்கத்திற்கும் நன்றிகள் பல.
கூகுளில் எனது பதிவுக்கான பண்டைய இந்தியா மேப்களை தேடிக் கொண்டிருக்கையில் உருவ வழிபடு பற்றிய இந்த உங்களது தளம் காணக் கிடைத்தது.
எல்லா தெய்வங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டாவர்களே என்று மெய்பிக்கப்பட்டிருந்தால்...இந்தக் கேள்வியை கேட்டுப் பாருங்கள் வித்யாசமான விடைகள் கிடைக்கக் கூடும். துணைக்கு வேதங்கள்,இதிகாசங்கள் ,புராணங்கள், சில நேரங்களில் துல்லியமாகவும் பல நேரங்களில் தோராயமாகவும் எழுதப் பட்ட வரலாற்று நூல்களை அழைத்துக் கொள்ள்ளலாம்
மனிதன் ஏன் தெய்வங்களை உருவாக்கினான்? ! பின்னோக்கிச் செல்ல வைக்கும் வினாக்கள். எப்போதுமே இப்படிப் பட்ட கேள்விகள் மிக சுவாரஸ்யமானவை.
Related post link ...if need gothrough this ,
http://karthigavasudev.blogspot.com/2010/11/view.html
கோவிலில் தான் கடவுள் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் ....
உங்களின் மேற்குறிப்பிட்ட வாக்கியம் பற்றி;
மிகச் சரியானதே நண்பரே!. ஆனால், கோவிலில் தான் கடவுள் இருக்க வேண்டும் என்பதில்லை, உருவ வழிபாடு தேவை இல்லை,
கடவுள் கல்லில் மட்டுமே இல்லை....
என்றெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? அங்கெல்லாம் இல்லை என்று நீங்கள் பட்டு, உணர்த்த பின் தானே? ( அப்படித் தானே?)
எல்லோருக்கும் தெரியும் வரை அது தொடரும்.. எத்தனை வருடங்கள் என்பது மட்டும் கேள்வி.
என்னுடைய மேற்குறிப்பிட்ட பகிர்வு ராதா கிருஷ்ணன் அவர்களின் கடைசி கருத்துப் பதிவிற்காக.
இன்னைக்கு தான் இந்த பதிவ படிச்சேன்.... கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க படிக்க வேண்டாம் அப்டின்னு சொன்னது கஷ்டமா தான் இருந்தது.....எனக்கு இல்ல.... ஆனா நம்ம முன்னோர்கள் சொன்ன ஒவொரு விசயத்திலயும் ஏதோ ஒரு நல்ல விசெயம் இருக்கு அப்டிங்கறது என்னோட நம்பிக்கை..... அத புத்தில உரைக்கற மாறி சொல்றதுக்கு தான் கடவுள் பயம் காட்டி அந்த நல்ல விசெயத்த சொல்லிருபாங்க, அப்டிங்கறது என் நம்பிக்கை. நாம அந்த விசெயத்த விட்டு கடவுள மட்டும் புடிச்சிகிடோம்.....
உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post.html
நன்றி
அருமையான பதிவு.. அட்டகாசமான கருத்துப் பரிமாற்றங்கள்! மிக்க நன்றி.
விண்டிலர் என்னும் சொல்லின் மூல வார்த்தை என்ன என்பதைக் கூறமுடியுமா?
Post a Comment